கோவை சிலிண்டர் வெடிப்பு… சிக்கியது சிசிடிவி காட்சிகள்

கோவை உக்கடம் ஈஸ்வரன் கோவில் வீதியில், சென்றுகொண்டிருந்த கார், வெடித்து நேற்று காலை விபத்தானது. காரை ஓட்டிச் சென்ற நபர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. உயிரிழந்தவர் பெயர் ஜமேசா முபின் என்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது, அந்த காரில் வெடிகுண்டு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் பொருள்கள் இருப்பதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை கிளப்பியது. இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவத்துக்கும், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கும் தொடர்பிருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியது இந்த விவகாரத்தை மேலும் பரபரப்பாக்கியது.

இதையடுத்து ஜமேசா முபினின் வீட்டில் காவல் துறையினர் 3 மணி நேரத்திற்கும் மேலாக தீவிர சோதனை நடத்தினர். அவருடன் தொடர்பில் இருந்த நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில் ஜமேசா முபினின் வீட்டின் அருகே இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளை காவல் துறையினர் கைப்பற்றீனர். அந்த சிசிடிவி காட்சிகளில்,  கடந்த சனிக்கிழமை இரவு 11.25 மணிக்கு ஜமேசா முபின் வீட்டில் இருந்து முபின் உள்ளிட்ட 5 பேர் ஒரு மூட்டையில் பொருட்களை தூக்கிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகளைக் கைப்பற்றிய காவல் துறையினர் மற்ற 4 நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிஜிபி சைலேந்திர பாபு, “வெடிவிபத்தில் உயிரிழந்தவர் 25 வயதான ஜமேசா முபின் என தெரியவந்துள்ளது. அவர் வந்த காரில் ஆணிகள், கோலிகுண்டு போன்றவை இருந்தது, தடயறிவியல் துறை ஆய்வில் தெரியவந்துள்ளது. 

ஜமேசா முபின் வீட்டை சோதனையிட்டதில் பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம், சல்பர் போன்ற நாட்டு வெடி தயாரிக்க தேவையான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இறந்தவர் மீது வேறு வழக்குகள் எதுவும் இல்லை. இறந்தவருடன் தொடர்பில் இருந்த நபர்களை விசாரித்து வருகின்றோம். 12 மணி நேரத்திலேயே குற்றவாளி யார் என்பதை தனிப்படை கண்டறிந்துள்ளனர். 

இந்த கார் 9 பேரிடம் கைமாறியுள்ளது. தொடர்ந்து இதுகுறித்து வேகமாக விசாரணை நடத்தி கார் யார் வாங்கினார் என்பது குறித்தும், சிலிண்டர் எங்கிருந்து வந்தது என்பது குறித்தும் கண்டறிந்துள்ளோம். கோவை மாநகர காவல் துறை சிறப்பாக இந்த வழக்கை கையாண்டனர். அவர்களுக்கு வாழ்த்துகள். 

மேற்கு மண்டலத்தில் இருந்து 6 தனிப்படையினர் இந்த வழக்கை விசாரித்து உதவியுள்ளனர். ஜமோசா முபினிடம் NIA ஏற்கனவே விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் அவர் மீது வேறு வழக்குகள் எதுவும் கிடையாது. போலீஸ் செக்போஸ்ட் அங்கு இருந்த்தால் அவர் இறங்கி ஓடி இருக்கலாம். இன்னும் புலன் விசாரணை நடைபெறுகின்றது.

காரில் எங்கேயா இந்த பொருட்களை கொண்டு சென்று இருக்கின்றனர். வருங்காலத்தில் ஏதாவது திட்டமிட்டு இருக்கலாம். வீட்டில் கைபற்றபட்ட வெடி மருத்துகளை பார்க்கும் போது எதிர்காலத்திற்கான திட்டங்களாக இருக்கலாம். தற்கொலை படையாக இருக்க வாய்ப்பில்லை. ஆணி, கோலி குண்டு போன்ற பொருட்கள் வண்டியில் இருந்த போது சிலிண்டர் வெடித்துள்ளது” என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.