திருமலை: வடமாலைப்பேட்டை சோதனை சாவடியில் வன்முறை சம்பவம் தொடர்பாக தமிழகம்- ஆந்திரா மாநிலங்கள் இடையே கலவரத்தை தூண்டும் வகையில், சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருப்பதி எஸ்பி எச்சரித்துள்ளார்.இதுகுறித்து திருப்பதி எஸ்பி பரமேஸ்வரரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆந்திர மாநிலம், வடமாலைப்பேட்டை டோல்கேட்டில் நேற்று முன்தினம் தமிழகத்தை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர்களுக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், (நேற்றைய) நேற்று முன்தினம் சர்ச்சையின் அடிப்படையில், வரும் நாட்களில், சமூக வலைத்தளங்களில் அவதூறு பிரசாரம், இரு மாநிலங்கள் இடையே கலவரத்தை தூண்டும் விதமாக ஊக்குவிக்கும் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு எஸ்பி வெளியிட்டுள்ள அறிக்கையில் எச்சரித்துள்ளார்.