திண்டுக்கல்: நாடு முழுவதும் நாளை மாலை நிகழும் பகுதி சூரிய கிரகணத்தை வெறுங்கண்ணால் பார்க்கக் கூடாது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து விஞ்ஞானி எபினேசர் கூறியதாவது: நாடு முழுவதும் நாளை (அக்.25) பகுதி சூரிய கிரகணம் ஏற்பட உள்ளது. சூரிய கிரகணம் ஏற்படுவதற்கு சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வருவதுதான் காரணம். இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஹேண்ட்லேவில் சூரிய கிரகணம் 55 சதவீதம் வரை தெரியும்.
திருவனந்தபுரம் வான் இயற்பியல் ஆய்வகத்தில் கிரகணம் இரண்டு சதவிகிதமும், கொடைக்கானலில் ஏறத்தாழ மூன்று முதல் நான்கு சதவிகிதமும் தென்படும். இந்த கிரகணம் மாலை 4 மணி 29 நிமிடங்களுக்குத் தொடங்கி இதனுடைய உச்சகட்ட மறைப்பு நிலை மாலை 5 மணி 30 நிமிடங்களுக்கும், சூரியன் மறையும்போது 5 மணி 48 நிமிடமுமாகும்.
இதனைப் பாதுகாப்பாகப் பார்ப்பதற்கு மயிலார் பில்டர் மற்றும் பாலிமர் பில்டரில் சூரிய கண்ணாடிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்தக் கண்ணாடி இல்லாமல் அதை வேறு முறைகளில் பார்த்தால் கண்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். சூரிய கிரகணத்தை அனைவரும் கண்டுகளிக்க கொடைக்கானல் சோலார் அப்சர்வேட்டரியில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.