சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடித்த விபத்தில் 4 வயது குழந்தை உட்பட இருவர் தீக்காய சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீக்காய சிறப்பு சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. தீபாவளி சமயத்தில் பட்டாசு விபத்துக்களால் காயம் அடைபவர்களுக்கு 24 மணி நேரமும் சிகிச்சையளிக்கும் வகையில் இந்த சிறப்புப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடித்ததில் நேற்று (அக்.23) முதல் 6 பேர் தீக்காயம் காரணமாக சிகிச்சை பெற்றுள்ளனர். இதில் 4 பேருக்கு லேசான தீக்காயம் என்பதால் சிகிச்சை பெற்று வெளி நோயாளியாக உடனே வீடு திரும்பினர்.
இருவர் சிகிச்சைக்காக உள்நோயாளிகளாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 9% தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட 4 வயது குழந்தைக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல், 17% தீக்காயத்துடன் அனுமதிக்கப்பட்ட 22 வயது பெண்ணுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பட்டாசு விபத்தில் லேசான தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.