பிரிட்டன் அரியணையில் இந்திய வம்சாவளி… பிரதமராகிறார் ரிஷி சுனக்!

கடந்த செப்டம்பர் மாதம் 6-ம் தேதி பிரிட்டன் பிரதமராகப் பதவியேற்ற லிஸ் ட்ரஸ், அங்கு நிலவிய பொருளாதார பிரச்னைகள் காரணமாக கடந்த வியாழக்கிழமை (20-10-22) தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, பிரதமர் பதவிக்காக நடந்த தேர்தலில் பென்னி மோர்டவுன்ட் பின்வாங்கியதை அடுத்து ரிஷி சுனக் பிரதமராகப் பதவி ஏற்க இருக்கிறார்.

கடந்த ஏழு மாதங்களில் பிரிட்டன் பிரதமராகப் பதவியேற்க உள்ள மூன்றாவது பிரதமர் ரிஷி சுனக் ஆவார். போரிஸ் ஜான்சனுக்குப் பிறகு பதவிக்கு வந்த லிஸ் ட்ரஸ் 45 நாட்கள் பதவியிலிருந்த பிறகு அக்டோபர் 20 அன்று பதவி விலகினார். அவருக்குப் பின் தற்போது ரிஷி சுனக் பிரதமராகப் பதவி ஏற்கிறார்.

ரிஷி சுனக்

ரிஷி சுனக் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். பிரிட்டன் வரலாற்றில், இந்திய வம்சாவளியைச் சார்ந்த ஒருவர் பிரதமர் பதவி வகிக்க இருப்பது இதுவே முதல் முறையாகும். கன்சர்வேடிவ் கட்சியின் உறுப்பினரான இவர் கடந்த 2015 முதல் ரிச்மண்ட் (யார்க்ஸ்) நாடாளுமன்ற உறுப்பினராக (எம்பி) இருந்து வருகிறார். ரிஷி சுனக், இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்றபோது பகவத்கீதையின் மீது உறுதிமொழி எடுத்திருக்கிறார்.

இவரின் பெற்றோர் இந்திய வம்சாவளியைச் சார்ந்தவர்கள். 1960 ‘களில் கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து இங்கிலாந்துக்குக் குடிபெயர்ந்துள்ளனர். சுனக்கின் தந்தை யாஷ்வீர் சுனக், தேசிய சுகாதார சேவை மையத்தின் பொது பயிற்சியாளராக இருந்தவர். அவரின் தாயார் உஷா சுனக் ரசாயன கடை ஒன்றை நடத்தி வந்தவர். ரிஷி சுனக்கின் மனைவி, இன்ஃபோசிஸின் தலைவர் நாராயண மூர்த்தியின் மகள் அக்ஷதா மூர்த்தி ஆவார்.

ரிஷி சுனக்கின் ஆண்டு வருமானம் 700 மில்லியன் பவுண்டுகளுக்கு மேல். இந்த வருமானத்தை அவர் இங்கிலாந்தில் உள்ள சொத்துக்களில் முதலீடு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. ரிஷி சுனக் சிறந்த எழுத்தாளரும் கூட. ‘எ போட்ரேட் ஆஃப் மார்டர்ன் பிரிட்டன்’ மற்றும் பொருளாதாரம் வணிகம் சார்ந்த பல புத்தகங்களையும் அவர் எழுதியுள்ளார்.

கோவிட் -19 நோய்தொற்று காலக்கட்டத்தில் ரிஷி சுனக் அரசியலிலும் கன்சர்வேடிவ் கட்சியிலும் மிகவும் பிரபலமானவராக இருந்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 2020 இல் Ipsos MORI நடத்திய வாக்கெடுப்பில், 1978 இல் லேபர் டெனிஸ் ஹீலிக்குப் பிறகு, சுனக் தான் அதிக திருப்தியான மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். எனவே அவர் அடுத்த பிரதம மந்திரி வேட்பாளராகும் வாய்ப்பும் அப்போதே இருந்தது. நகைச்சுவைகள் மற்றும் கிசுகிசுக்கள் மூலம் சுனக் சமூக ஊடகங்களிலும் பத்திரிகைகளிலும் மிகவும் பிரபலமானார்.

சுனக் மீதான பொதுமக்களின் எண்ணங்கள் 2021 இல் நேர்மறையாகவே இருந்தன. எனினும் காலப்போக்கில் அவரது புகழ் படிப்படியாகக் குறைந்தது. 2022 -ம் ஆண்டின் தொடக்கத்தில் சுனக் குடும்பத்தின் நிதி விவகாரங்கள் ஆய்வுக்கு உட்பட்டதால் இந்த வீழ்ச்சி தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ரிஷி சுனக் பெரும்பான்மையானவர்களின் ஆதரவுடன் இங்கிலாந்தின் அடுத்த பிரதமராகப் பதவி ஏற்க இருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.