மகசூல் அதிகரிப்பால், கத்தரிக்காய் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால், வேப்பனப்பள்ளி பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்ட கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காய்கறிகள், மலர்கள் சாகுபடியில் அதிகளவில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, ஊத்தங்கரை, மத்தூர், ராயக்கோட்டை, போச்சம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் முள்ளங்கி, வெண்டை, கத்தரிக்காய் சாகுபடி செய்யப்படுகிறது.
வேப்பனப்பள்ளி பகுதியில் பெய்த மழையால் வழக்கத்தை விட கூடுதல் விவசாயிகள் கத்தரிக்காய் சாகுபடியில் ஈடுபட்டனர்.
கத்தரிக்காய் சாகுபடியை பொறுத்தவரை நடவு செய்த 40 நாட்களில் அறுவடை கிடைக்கும். தொடர்ந்து 110 நாட்கள் வரை பலன் கிடைக்கும். இங்கு விளைவிக்கப்படும் கத்தரிக்காய்கள் உள்ளூர் வார சந்தைகள், உழவர் சந்தை மற்றும் வேலூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும், கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
தற்போது, மகசூல் அதிகரித்துள்ள நிலையில், விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால், அறுவடை செய்த கத்தரிக்காயை விவசாயிகள் மார்க்கண்டேய நதியில் வீசி வருகின்றனர்.
இது தொடர்பாக விவசாயிகள் கூறியதாவது: மழையால் வழக்கத்தை விட கத்தரிக்காய் மகசூல் அதிகரித்துள்ளது. இதனால், விலை கிடைக்கவில்லை. 80 கிலோ கொண்ட ஒரு மூட்டை ரூ.100-க்கு விற்பனையாகிறது.
இதனால், அறுவடை, போக்குவரத்துக் கூலி கூட கிடைக்காமல், விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, பலர் அறுவடை செய்த கத்தரிக் காய்களை கங்கோஜிகொத்தூர் அருகே மார்க்கண்டேய நதியில் வீசி சென்றனர். நல்ல மழை பெய்தும் விவசாயிகள் வருவாய் இழப்பை சந்திக்கும் நிலையுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.