சென்னை: கோவை கார் வெடி விபத்தில் உள்ள மர்மத்தை வெளிப்படுத்தி, மக்களிடம் அச்சத்தை போக்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அண்ணாமலை நேற்று தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மக்கள் அதிகம் புழங்கும் கோவை உக்கடம் பகுதியில் நடந்த கார் வெடி விபத்து, மிகுந்த அதிர்ச்சியையும், பல்வேறு சந்தேகங்களையும் எழுப்புகிறது.
பண்டிகை காலத்தில் கோவை மக்களிடம் ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்க, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். டிஜிபி மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு உடனடியாக சென்று, விசாரணை தொடங்கியுள்ளதை தமிழக பாஜக வரவேற்கிறது.
தமிழகத்தை மீண்டும் கலவர பூமியாக மாற்றத் துடிக்கும் சமூக விரோதிகளிடம் இருந்து, மக்களைக் காக்கும் பொறுப்பு காவல் துறையிடம் உள்ளது. எனவே, இந்த வெடி விபத்தின் மர்மம் விலக, போதிய நடவடிக்கைகளை காவல் துறை உடனடியாக எடுக்கும் என்று நம்புகிறோம். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.