புதுடில்லி: ‛டுவென்டி-20′ உலக கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் மோதிய போட்டியில் இந்திய அணி வெற்றிப்பெற்றது குறித்து கருத்து தெரிவித்த கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சையிடம் பாகிஸ்தான் ரசிகர் ஒருவர், ‛முதல் மூன்று ஓவரை பாருங்கள்’ எனக் கூறினார். இதற்கு சுந்தர் பிச்சை அளித்த பதில் அனைவரையும் ஈர்த்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (அக்.,23) நடந்த ‛டுவென்டி-20′ உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி, பாகிஸ்தானை கடைசி பந்தில் வீழ்த்தி வெற்றிப்பெற்றது. விராட் கோஹ்லியின் அபாரமான ஆட்டத்தால் தோல்வியின் பிடியில் இருந்த இந்திய அணியை இறுதிக்கட்டத்தில் வெற்றிக்கு அழைத்து சென்றார். பாகிஸ்தானுடனான இந்த வெற்றி, இந்திய ரசிகர்களுக்கு தீபாவளி பரிசாக கிடைத்ததாக பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து இந்திய அணிக்கு பாராட்டு தெரிவித்தனர்.
இந்த நிலையில், கூகுள் நிறுவன தலைமை செயலர் சுந்தர் பிச்சை தனது சமூக வலைதளப் பக்கத்தில் இன்று தனது தீபாவளி வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டார். மேலும், ‛நான் நேற்றைய போட்டியின் கடைசி 3 ஓவர்களை பார்த்து இன்றைய தீபாவளி பண்டிகையை கொண்டாடினேன்’ என அவர் பதிவிட்டிருந்தார். இதற்கு பாகிஸ்தானை சேர்ந்த ரசிகர் ஒருவர், ‛நீங்கள் முதல் மூன்று ஓவர்களையும் பார்க்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தார். இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ஆட்டமிழந்ததை மேற்கோள் காட்டி பதிவிட்டிருந்தார்.
அதற்கு சுந்தர் பிச்சை, ‛நான் அதையும் பார்த்தேன். புவனேஷ்வர் குமாரும், அர்ஷதீப் சிங்கும் சிறப்பாக பந்து வீசினார்கள்’ என போட்டியின் துவக்கத்தில் பாகிஸ்தான் பேட் செய்த முதல் மூன்று ஓவர்களை குறிப்பிட்டு பதிலடியாக தெரிவித்தார். அவரது பதில், கிரிக்கெட் ரசிகர்களிடையே அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement