சேலம்: மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் 2-வது நாளாக நேற்றும் விநாடிக்கு 85 ஆயிரம் கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 1 லட்சத்து 5 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர் வரத்து, மாலையில் 85 ஆயிரம் கனஅடியாக சரிந்தது. தொடர்ந்து, நேற்று 2-வது நாளாக விநாடிக்கு 85 ஆயிரம் கனஅடியாக நீர் வரத்து நீடித்து வருகிறது. அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், அணைக்கு வரும் நீர் முழுவதும் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன்படி, நீர் மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 21 ஆயிரத்து 500 கனஅடி, 16 கண் மதகுகள் வழியாக 63 ஆயிரத்து 500 கனஅடி என மொத்தம் 85 ஆயிரம் கனஅடி உபரி நீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அதேபோல, கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 300 கனஅடியாக இருந்த நீர் திறப்பு, நேற்று முதல் விநாடிக்கு 200 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. அணை நீர் மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சி-யாகவும் உள்ளது. காவிரியில் அதிகளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் கரையோர பகுதிகளில் அனைத்துத் துறை அலுவலர்களும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். டெல்டா மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வெள்ளஅபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஒகேனக்கல்: கர்நாடக மாநில அணைகளில் இருந்து நீர் திறப்பு குறைப்பு மற்றும் இருமாநில காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் மழை குறைந்ததால், தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.