மத்திய அரசுத் துறைகளில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் ‘ரோஜ்கார் மேளா’ திட்டத்தின் கீழ், 255 பேருக்கு பணிநியமன ஆணைகளை சென்னையில் நடந்த விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்கினார்.
நாடு முழுவதும் உள்ள, மத்திய அரசுத் துறைகளான ரயில்வே, வருமான வரி, சுங்கம், ஜிஎஸ்டி, அஞ்சல், பொதுத் துறை வங்கிகள் மற்றும் பொதுத் துறை நிறுவனப் பணிகளில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் ‘ரோஜ்கார் மேளா’ திட்டத்தை பிரதமர்நரேந்திர மோடி காணொலி வாயிலாக நேற்று தொடங்கிவைத்தார்.
இதையொட்டி, பல்வேறு மாநிலங்களில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்று, அந்தந்த மாநிலங்களில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினர். சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று, 255 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்தில் தேர்வான 76 பேர், திருச்சி கோட்டத்தில் 7, கடற்படையில் 52, ஜிஎஸ்டி – சுங்கத் துறையில் 18, வருமான வரித் துறையில் 15, இஎஸ்ஐசி-ல் 25, இஸ்ரோவில் 1, கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ்அண்ட் இன்ஜினீயர்ஸ் நிறுவனத்தில் 1, அஞ்சல் துறையில் 6, சிஐஎஸ்எஃப்-ல் 7, சிஆர்பிஎஃப்-ல்10, எஸ்எஸ்பி-ல் 1, இந்தியன் வங்கியில் 17, கனரா வங்கியில் 8, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் 2, பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவில் 9 பேர் என மொத்தம் 255 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இவர்கள் தமிழகம், ஆந்திரா, உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள்.
முன்னதாக, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பணி நியமன ஆணை பெற்றவர்களிடம் கலந்துரையாடினார். அப்போது, பணிநியமன ஆணையை பெற்ற தமிழகத்தை சேர்ந்த சிலர், ஆங்கிலத்தில் பதில் அளிக்க முயன்றபோது, தமிழிலேயே பேசுமாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், தெற்கு ரயில்வே பொது மேலாளர் பி.ஜி.மால்யா, ஐசிஎஃப் பொது மேலாளர் ஏ.கே.அகர்வால், மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவர் நிதின் குப்தா, சென்னை மண்டல பொது மேலாளர் கணேஷ் மற்றும் வங்கி, பாதுகாப்பு, வருமான வரித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.