வெல்டிங் டூ ஆக்டிங் – ‛போலீஸ்' பசுபதிராஜ்

தம்பி… ஒரு போட்டோபுடிக்கணும். நான் ஒரு ஆளை காட்டுறேன். அவ தொல்லை தாங்கலை' என 'முண்டாசுபட்டி' படத்தில் ஹீரோவிடம் அப்பாவியாக பேசும் அந்த மீசைக்காரரை எளிதில் மறந்து விட முடியாது. அந்த மீசைதான் அவருக்கு பலம். அதனாலேயே அவருக்கு படங்களில் கம்பீரமாக 'சல்யூட்' அடிக்கும் போலீஸ் கேரக்டர்கள் கிடைக்கிறது. அந்த மிடுக்கில் சினிமாவில் வெள்ளி விழா ஆண்டை நோக்கி நடைபோட்டு கொண்டிருக்கிறார் 55 வயதான பசுபதிராஜ். நடிகர் மட்டுமல்ல, சமூக சேவகர், சுற்றுச்சூழல் ஆர்வலர் என பன்முக தன்மை கொண்ட 'கதாநாயகன்'. தினமலர் தீபாவளி மலருக்காக அவரை சந்தித்தோம்.

* நடிகர் ஆவதற்கு முன் நீங்கள்பார்க்காத வேலையே இல்லையாமே…
(சிரிக்கிறார்) இந்த சிரிப்புக்கு பின்னாடி அவ்வளவு சிரமங்கள் ஒளிந்து கொண்டிருக்கின்றன. பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னை பூந்தமல்லிதான். பள்ளி படிப்பை முடித்ததுமே காஸ் வெல்டிங் வேலைக்கு சேர்ந்தேன். சம்பளம் இல்லை. தொழில் கத்துகிட்டேன். ஒருநாள் கையில் வெட்டு விழுந்து 3 தையல் போட்டேன்.இதை கவனித்த பக்கத்து வீட்டு அண்ணன், வாரம் 10 ரூபாய் சம்பளத்திற்கு ஒரு பவர் சுவிட்ச் கம்பெனியில சேர்த்து விட்டார். கொஞ்ச நாளைல உடம்புக்கு ஒதுக்காம மஞ்சள்காமாலை வந்தது. அதனால் அந்த கம்பெனியிலேேய டிசைன் பண்றது, நுாலகர், ஜெராக்ஸ் ஆப்பரேட்டர் என பல வேலை பார்த்தேன். ஆள் குறைப்பு நடவடிக்கையில 1997ல் என்னை வெளியே அனுப்பிச்சிட்டாங்க.

* சினிமா கதை மாதிரில இருக்கு… பிறகு என்னாச்சு…
படித்தவனுக்கு ஒரு வேலை. படிக்காதவனுக்கு பல வேலைனு முடிவு செய்து வெளியே வரும்போது சந்தோஷமாதான் வந்தேன். சின்ன வயசுல இருந்தே நடிப்பு மேல் ஆர்வம் இருந்ததால், அந்த நம்பிக்கையில 'டிவி' சீரியல்களில் வாய்ப்புதேடி நடித்தேன். இந்த சூழலில் 1998ல் திருமணம் நடந்தது.

* 'டிவி' சீரியல்களில் தொடர்ந்து வாய்ப்பு கிடைத்ததா.

இல்லை. அப்பப்ப கிடைச்சது. குடும்பத்தை கவனிக்கணுமே. இதனால டைல்ஸ் ஒட்டுறது, பிளம்பிங், துாய்மை பணியாளர், கூரியர், கேட்டரிங், பவுன்சர்(பாதுகாவலர்) வேலைனு எல்லா வேலைகளுமே செய்தேன். பிறகு வீட்டிலிருந்து உணவு தயாரித்து ேடார் டூ டோர் சப்ளை செய்தேன். ஏர்போர்ட்டில் பயணிகளின் லக்கேஜ்களை கொண்டுபோய் சேர்க்கும் வேலையையும் பார்த்தேன்.

* சினிமாவுக்கு எப்பதான் வந்தீங்க…
ஒரு நண்பர் 'ஏன் சினிமாவுக்கு ட்ரை பண்ணக்கூடாது' என கேட்டார். தேட ஆரம்பிச்சேன். இரவு காற்றாலையில் 8 மணி நேரம் வேலை செய்வேன். காலையில் சான்ஸ் தேடுவேன். அப்படிகிடைச்சதுதான் முண்டாசுபட்டி, ராட்சசன், வேட்டை, மாநகரம், கைதி போன்ற படங்கள்.

* சமீபத்தில் மலையாளத்தில் வெளியான 'ஜனகன மண' படம் உட்பட பல படங்களில் போலீசாகவே வர்றீங்களே.
என்னை நம்பி கொடுக்கிறார்கள். இதுவரை நடித்தவை 'பாசிட்டிவ்' கேரக்டர் என்பதால் நானும் மறுப்பதில்லை. பெரிய ஆக்டர் கதை கேட்டு நடிப்பாங்க. நாமெல்லாம் அப்படி கேட்க முடியாது. கூப்பிட்டா நடிக்க வேண்டியதுதான். அப்படி கிடைச்சதுதான் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கிய 'ஜனகன மண'. படம் முழுக்க வர்ற கேரக்டர். அதேபோல் மம்மூட்டி தயாரித்த படத்திலும் நடித்தேன். தமிழில் விஜய் ஆண்டனி நடிக்கும் 'வள்ளி மயில்' படத்திற்கு வக்கீல் கேரக்டருக்கு இயக்குனர் சுசீந்திரன் கூப்பிட்டார். பிறகு என்ன நினைத்தாரோ போலீஸ் கேரக்டர் கொடுத்து விஜய் ஆண்டனியுடன் கூடவே வர்ற மாதிரி பார்த்துக்கிட்டார்.

* லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில சான்ஸ் கிடைக்கலையா.

அவரது கைதி படத்தில நடிச்சதால எனக்கு வாய்ப்பு வந்தது. அந்த நேரத்தில் ஜனகனமண படத்தில் நடித்துக்கொண்டிருந்தேன். அது முக்கியமான கேரக்டர் என்பதால் விக்ரம் படத்தில சான்ஸ் கிடைச்சும் நடிக்க முடியல.

* சினிமா தவிர…
ஓய்வுநேரங்களில் திருவாரூர் கலைமணி குழுவினருடன் இணைந்து மரக்கன்றுகளை நட்டு வருகிறேன். நான் செல்லும் இடங்களில் எல்லாம்இதை வலியுறுத்தி வருகிறேன். தபால் கார்டுகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினேன். இந்த பூமியை காக்க நம்மாலான பணிகளை செய்யவேண்டும். அதற்காக பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து, துணிப்பையை பயன்படுத்த வேண்டும். எனக்கு ஒரு ஐடியா இருக்கு. வண்டியில தையல் மிஷினை எடுத்துக்கிட்டு ஊர் ஊராக சென்று கிழிந்த துணிப்பைகளை இலவசமாக தைத்து கொடுத்து அதன் பயன்பாட்டை அதிகரிக்க செய்வது. மக்களிடம் நம்மால் ஒரு மாற்றம் ஏற்பட்டால் சமூகத்திற்கு நல்லதுதானே.

இவ்வாறு கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.