*ஒன்றிய அரசு திடீர் நடவடிக்கை
*காங்கிரஸ் தலைவர்கள் அதிர்ச்சி
புதுடெல்லி: வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற்ற விவகாரத்தில் விதிமீறல்கள் நடந்து உள்ளதாக கூறி சோனியா காந்தி தலைவராக உள்ள ராஜிவ் காந்தி அறக்கட்டளையின் உரிமத்தை ரத்து செய்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி குடும்பத்தினர் ராஜிவ் காந்தி அறக்கட்டளை, ராஜிவ்காந்தி தொண்டு நிறுவனம், இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை என 3 அறக்கட்டளைகளை நடத்தி வந்தனர்.
ராஜிவ் காந்தி அறக்கட்டளை மற்றும் ராஜிவ்காந்தி தொண்டு நிறுவனத்தின் தலைவராக சோனியா காந்தியும், உறுப்பினர்களாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி, ப.சிதம்பரம், மாண்டேக் சிங் அலுவாலியா, சுமன் துபே, அசோக் கங்குலி, பன்சி மேத்தா மற்றும் தீப் ஜோஷி ஆகியோர் உள்ளனர். இந்த 2 அமைபுகளும் அறக்கட்டளைகளும் வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற்றதில் விதிமீறல்கள் நடந்துள்ளதாக புகார் எழுந்தது. குறிப்பாக, வருமான வரி தாக்கல் செய்யும் போது ஆவணங்களில் முறைகேடு செய்ததாகவும், நிதியைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து நிதியைப் பெறும்போது பணமோசடி செய்ததாகக் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது.
இவ்விவகாரம் தொடர்பாக, விதிமுறை மீறல் ஏதும் நடந்துள்ளதா என்பதை அறிய ஒன்றிய அமைச்சகங்களுக்கு இடையிலான குழுவை ஒன்றிய அரசு கடந்த 2020ம் ஆண்டு அமைத்தது. அதன் அடிப்படையில் வௌிநாட்டில் இருந்து பெறப்பட்ட நிதி, நன்கொடை தொடர்பாக அமலாக்கத்துறையின் சிறப்பு இயக்குநர் தலைமையில் விசாரணை நடந்தது. இந்நிலையில், வெளிநாட்டில் இருந்து நிதி மற்றும் நன்கொடை பெறுவதில் விதிமுறைகளை மீறியதாக ராஜிவ் காந்தி அறக்கட்டளையின் (கடந்த 1991ம் ஆண்டு ஜூன் 21ல் தொடங்கப்பட்டது) உரிமத்தை ரத்து செய்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டத்தின் கீழ் ராஜிவ் காந்தி அறக்கட்டளை மற்றும் ராஜிவ் காந்தி தொண்டு நிறுவனத்தின் பதிவு ரத்து செய்யப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது காங்கிரசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.