ICC T20 WC: சூப்பர் 8, 12 சுற்றுகளில் முதல் வெற்றியைப் பெற்ற வங்கதேசம்; போராடித் தோற்ற நெதர்லாந்து!

சூப்பர் 12 சுற்றின் இன்றைய ஆட்டத்தில் வங்கதேச அணியும் நெதர்லாந்தும் மோதியிருந்தன. பரபரப்பாகச் சென்ற இந்தப் போட்டியை 9 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் வென்றிருக்கிறது.

Ban Vs Net

டாஸ் வென்று பந்து வீசத் தீர்மானித்தது நெதர்லாந்து.

அதன்படி ஷான்டோ – சர்க்கார் இணை ஆட்டத்தைத் தொடங்கியது. பவர்ப்ளேயில் ஓப்பனர்கள் சிறப்பாகவே தொடங்கினர். 6வது ஓவரில் பிரிங்கிள் பந்தில் சர்க்கார் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த லிட்டன் தாஸ் பேக் ஆப் லென்த் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷகிப்பை அறிமுக வீரரான ஷாரீஸ் அகமது பந்தில் சிக்ஸ் அடிக்க முயன்று ஆட்டமிழந்தார். கடந்த சில மாதங்களாகச் சிறந்த பார்மில் உள்ள ஆஃபிப் ஹொசைன் மீண்டும் இம்முறை அணியைக் காப்பாற்றினார். 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து களமிறங்கிய மொஸடெக் ஹொசைன் அதிரடியாக ஆடி 20 ரன்கள் எடுத்ததன் மூலம் 145 ரன்களை வங்கதேசம் எடுத்தது.

நெதர்லாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் ஷார்ட் மற்றும் பேக் ஆப் லென்த் பந்துகளைச் சிறப்பாக வீசினர். 6 விக்கெட்டுகளை வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே வீழ்த்தியிருந்தனர்.

பின்னர் சேஸிங்கைத் தொடங்கிய நெதர்லாந்து அணி அப்படி ஒரு மோசமான தொடக்கம் கிடைக்கும் என நிச்சயம் நினைத்திருக்காது. டஸ்கின் அகமது முதல் இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதில் பார்மில் உள்ள டி லீட் விக்கெட் மிக முக்கியமானதாக அமைந்தது. ஷகிப் வீசிய ஓவரில் இரண்டு ரன் அவுட் ஆனது நிலைமையை மேலும் மோசமாக்கியது.

காலின் ஆக்கர்மேன் ஒருமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 62 ரன்களைச் சேர்த்திருந்தார் ஆக்கர் மேன். அவருடன் யாரும் பார்ட்னர்ஷிப் அமைக்கவில்லை என்பதுதான் நெதர்லாந்து தோல்விக்கு முக்கியமான காரணமாக இருந்தது.

Bangladesh

ஹசன் மஹ்மூத் வீசிய விக்கெட் மெய்டன் ஓவர் ஆட்டத்தின் முக்கியமான திருப்புமுனை.

டஸ்கின் அகமதின் கடைசி ஓவரில் ஆக்கர்மேன் அவுட்டானவுடனே ஆட்டம் முடிந்து விட்டது என்று நினைத்த போது வான் மீக்கெரான் இறுதியில் ஆட்டத்தை தன் அதிரடியின் மூலம் பரபரப்பாக்கினார். இறுதியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் வங்கதேசத்தின் பீல்டிங் சிறப்பாக இருந்தது. அவர்கள் வென்றதற்கு மிக முக்கியமான காரணம் அவர்களின் பீல்டிங் என்றால் அது மிகையாகாது.

ஆனால், இது அவர்களைத் திருப்திபடுத்த கூடிய அளவிற்கான வெற்றி இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. சௌமியா சர்க்காரை எப்படி ஒரு டெத் பௌலராக பார்க்கிறார்கள் என்று புரியவில்லை. ஆக்கர் மேன் அவுட் ஆகாமல் இருந்திருந்தால் ஆட்டத்தின் முடிவு மாறியிருக்கலாம்.

அதுவும் டி20 உலகக்கோப்பையில் ‘சூப்பர் 8, 12’ போன்ற சுற்றுகளில் வங்கதேசம் பெறும் முதல் வெற்றி இதுவாகும். இதற்கு முன்னர் ஆடிய 16 போட்டிகளிலும் தோல்வியை மட்டுமே பெற்றிருந்தனர். ஆயிரம் குறைகள் இருப்பினும் வெற்றி என்பது வெற்றிதான்! அந்தக் குறைகளை அடுத்த போட்டியில் செய்யாமல் இருப்பது வங்கதேச அணியினர் கையில்தான் உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.