உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்
கே.விஜயகுமார், நெல்லையில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: ‘பஞ்சாப் கவர்னராக பதவியேற்பதற்கு முன், தமிழக கவர்னராக நான்கு ஆண்டுகள் பதவி வகித்தேன்; அப்போது, அங்கு நிலைமை மோசமாக இருந்தது. பல்கலைகளின் துணை வேந்தர் பதவி, 40 கோடி முதல் 50 கோடி ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
தமிழக கவர்னராக இருந்த போது, சட்டத்துக்கு உட்பட்டு, 27 துணை வேந்தர்களை நியமித்தேன்’ என, தமிழகத்தின் முன்னாள் மற்றும் பஞ்சாப் மாநிலத்தின்இந்நாள் கவர்னரான பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.
பெரிய பொறுப்பில் இருப்பவர்களின் வாயிலிருந்து வரும் வார்த்தைகளும், கையொப்பமிட்டு வெளியிடும் அறிக்கைகளும் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும். கூறும் குற்றச்சாட்டும் ஆணித்தரமாக இருக்க வேண்டும். அதற்கு பதிலாக நம்பப்படுகிறது, கூறப்படுகிறது என்றெல்லாம் சொல்லக்கூடாது.
தமிழகத்தில் துணை வேந்தர்கள் பதவி, ௪௦ கோடி முதல், ௫௦ கோடி ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது என்றால், அந்த விற்பனையை முன்னின்று செய்தவர்கள் யார்; அவ்வாறு விற்பனை செய்தவர்களிடம் பணம் கொடுத்து பதவி வாங்கியவர்கள் யார் யார் என்று, அப்பட்டமாக தெரிவித்திருக்க வேண்டும்.
இரண்டும் இல்லாமல், ‘செய்யப்பட்டது; பேசப்பட்டது; வாங்கப்பட்டது’ என்று சொல்லிக் கொண்டிருப்பது சரியான வழிமுறையில்லை. இந்த விவகாரத்தில், கவர்னர் புரோஹித் உண்மையை உரக்கச் சொல்ல வேண்டும்.
அதேநேரத்தில், தற்போதைய கவர்னர் ரவியும், துணை வேந்தர்கள் நியமனத்தில் ஊழல் நடக்கக் கூடாது என்பதற்காக, பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அதனால், துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில முதல்வருக்கு வழங்கி, தற்போதைய திராவிட மாடல் அரசு புதிதாக சட்டம் இயற்றியது. இந்தச் சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் கொடுத்து விட்டால், அ.தி.மு.க., ஆட்சியில், ௫௦ கோடி ரூபாய் வரை விலை பேசப்பட்ட துணை வேந்தர்கள் பதவி, அதை விட இரு மடங்கு விலை பேசப்படும் அபாயம் உள்ளது. ஏனெனில், விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்வதில் கைதேர்ந்தவர்கள் திராவிட செம்மல்கள்.
தெனாலிராமன் கொடுத்த சூடான பாலை குடித்த பூனை, அதன் பிறகு ஆறிய பாலை அதன் முன் வைத்தாலும் விலகி ஓடும். அதுபோல, துணைவேந்தர்கள் நியமனத்தில், கவர்னர் காட்டும் அதிரடியானது, சூடான பாலை குடித்த பூனை போல, தி.மு.க., ஆட்சியாளர்களை ஓட வைக்க வேண்டும்.மறந்தும், துணை வேந்தர்கள் நியமனம்தொடர்பான சட்டத்திற்கு ஒப்புதல் கொடுத்து விடாதீர்கள் கவர்னர் அவர்களே!
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்