இறங்கி வந்த எடப்பாடி ஷாக்; முருங்கை மரம் ஏறிய ஓபிஎஸ்!

அதிமுக ஒற்றை தலைமை குறித்த மோதலில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதனை எதிர்த்த

மற்றும் அவரது ஆதரவாளர்களை எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் இருந்து நீக்கினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஓபிஎஸ் அதிமுக விவகாரத்தை தற்போது உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையம் வரை கொண்டு சென்றுள்ளார். இதற்கிடையே அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு கல்தா கொடுக்க நினைத்த எடப்பாடி பழனிசாமியின் திட்டத்துக்கு உச்சநீதிமன்றம் திடீரென தடை விதித்தது.

இதை சரிக்கட்டுவதற்காக எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுகவினர் டெல்லிக்கு விரைந்து பாஜக மேலிட தலைவர்களை சந்தித்து காய்களை நகர்த்தினர். ஆனால், பாஜக தலைவர்கள் ‘நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறனும்னா அதிமுகவில் ஒற்றுமை ஏற்பட வேண்டும். அதற்கு முதலில் ஏற்பாடு செய்துவிட்டு இங்க வாங்க’ என, கூறி அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது.

இதை ஏற்க மறுத்த எடப்பாடி பழனிசாமி டென்ஷனில் தமிழகம் திரும்பினார். கையோடு சட்ட பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கிவிட்டு ஆர்.பி.உதயக்குமாரை அமர்த்த சபாநாயகருக்கு கடிதம் அளித்தார்.

இந்த கோரிக்கையையும் சபாநாயகர் நிராகரித்து விட்டதால் எடப்பாடி பழனிச்சாமிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை ஆணைய அறிக்கை வெளியாகி எடப்பாடி பழனிச்சாமியின் மிச்சம் மீதி இருந்த பெயரையும் டேமேஜ் செய்துவிட்டது.

இந்நிலையில் இனியும் ஓபிஎஸ்சுடன் இணையாவிட்டால் அதிமுக கையைவிட்டு போய் விடும் என்கிற ரீதியில் மூத்த நிர்வாகிகள் எடப்பாடியின் காதில் ஓதியதை தொடர்ந்து அவரும் இறங்கி வந்ததாக கூறப்படுகிறது.

அதன்படி சமீபத்தில் எடப்பாடி பழனிசாமியின் உறவினரும், ஓ.பன்னீர்செல்வம் உறவினரும் மதுரையில் சந்தித்து பேசியதாகவும் அப்போது ஓபிஎஸ்சை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டுமானால், இணை பொதுச்செயலாளர் பதவியை ஏற்று, உச்சநீதிமன்றத்தில் இருக்கும் வழக்கை வாபஸ் பெற வேண்டும் என, கோரிக்கை வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதற்கு ஓபிஎஸ் தரப்பு, ‘இரட்டை இலை சின்னத்துக்கு கையெழுத்து போடுகிற அதிகாரம் மற்றும் அதிமுக அவைத் தலைவர் என்ற பதவியை மாற்றி தலைவராக ஓபிஎஸ்சை அறிவிக்க வேண்டும்’ என கூறியுள்ளது.

இதனை சற்றும் எதிர்பாராத எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மேற்கொண்டு எந்த உத்தரவாதத்தையும் கொடுக்காமல் பேச்சுவார்த்தையை முடித்துக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

பெரும் பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் எடப்பாடி பழனிசாமி இறங்கி வந்த நிலையில் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் முருங்கை மரத்தின் மீது ஏறியதால் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கவலை அடைந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.