உறுதி செய்ய வேண்டும்!

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

‘வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும்’ எனத் தமிழ் பாட்டி ஔவையார் பாடிச் சென்றுள்ளார்.

இவர் வரப்பு என்று குறிப்பிட்டுள்ளது வயல் வரப்பு மட்டுமல்ல, அணை, ஏரி, குளங்களின் கரைகளையும் சேர்த்துதான். தமிழ்நாடு மழை மறைவு பிரதேசம் என்பதால் மழைநீரை ஏந்திப் பிடிக்க, ஏராளமான நீர்நிலைகளை நம் முன்னோர் வைத்திருந்தார்கள். ஏந்தல், தாங்கல், பாக்கம் என்ற பெயரில் முடியும் ஊர்ப் பெயர்கள் இப்படித்தான் உருவாகின.

தமிழ்நாட்டின் நிலவியல்படி மழை கொட்டித் தீர்க்கும் அல்லது வறட்சி வந்து வாட்டும். இதைத் தவிர்க்கவே நீர் நிலைகளை உருவாக்குவதை அன்றைய ஆட்சியாளர்கள் முக்கியத் திருப்பணியாகச் செய்தனர்.

‘ராஜராஜ சோழன் நீர் நிலைகளைப் பாதுகாத்தான்; பல்லவ மன்னர்கள் காஞ்சிபுரத்தைச் சுற்றிலும் 4,000 ஏரிகளை வெட்டினார்கள்’ என்று வரலாற்றை வாய் மணக்கப் பேசுவதில் மட்டும் ஆண்ட, ஆளும் அரசுகள் அக்கறை செலுத்துகின்றன. செயலில் ஒன்றுமில்லை. இதனால்தான் மழைக்காலங்களில் வெள்ளம் புகுந்து பயிர்கள் பாதிக்கப்படுவதும், வறட்சியில் நீர் இல்லாமல் பயிர்கள் வாடுவதும் இன்று வரை வாடிக்கையாக உள்ளன.

‘‘தமிழகத்தில் மூன்று நீர்த்தேக்கங்களில் மேலாண்மைத் திட்டங்கள் முழுமையாக நிறைவேறவில்லை’’ என்று அண்மையில் கணக்காய்வு தணிக்கைத் துறை சுட்டிக்காட்டியுள்ளதே இதற்குச் சரியான உதாரணம். நீர் மேலாண்மையில் கோட்டைவிட்டுக்கொண்டிருப்பதால், கிராமம், நகரம், மாநகரம் எல்லாம் வெள்ளத்தில் மூழ்குவது தொடர் கதையாக உள்ளது.

மழை நீர்

‘தமிழகத்தை 2030-ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் பொருளாதார மாநிலமாக மாற்றுவோம்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். ஆனால், அதைச் சாதிப்பதற்கு தொழிற்சாலைகளை மட்டும் உருவாக்கினால் போதாது. தகுந்த சுற்றுச்சூழலும் வாழ்வாதாரங்களும் அவசியம். இதை உறுதிப்படுத்துவதற்கு நீராதாரங்கள்தான் உயிராதாரம். மாநிலம் முழுக்க உள்ள நீர் நிலைகளை செப்பனிட்டு, நீரைச் சேமித்து, வறட்சிக் காலத்தையும் சமாளிக்க முடியும் என்கிற நிலையை உருவாக்க வேண்டும்.

மாறி மாறி ஆட்சிகள் வரும்போதெல்லாம் ‘குடிமராமத்து’ என்கிற பெயரில் கோடிகள் கொட்டப்படுகின்றன. ஆனால், இப்போதும்கூட மாநிலம் முழுக்க ஆயிரக்கணக்கான நீர்நிலைகள் வறண்டேதான் கிடக்கின்றன. திட்டங்கள் தீட்டப்படுகின்றன… அவை செயல்பாட்டுக்கும் வருகின்றன. ஆனால், நூறு சதவிகிதம் பலன் தருவதில்லை என்பதை திறந்த மனதோடு ஒப்புக்கொள்ள வேண்டும்.

ஆக, 2030-ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் பொருளாதாரத்தை அடைய வேண்டுமென்றால், 2023-ம் ஆண்டுக்குள்ளாகவே நீராதாரங்களின் உண்மையான இருப்பை, முதல்வர் ஸ்டாலின் முதலில் உறுதி செய்ய வேண்டும்!

– ஆசிரியர்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.