நாகர்கோவில்: உலக்கை அருவியை காண சென்றபோது காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி தவித்த 3 குழந்தைகளை தனது வயிற்றில் கயிற்றை கட்டி இறங்கி மீட்ட வாலிபர் மயங்கி சாய்ந்தார். கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள உலக்கை அருவிக்கு கடந்த இரண்டு நாட்கள் முன்பு நாகர்கோவில் கோட்டார் பகுதியை சேர்ந்த குழந்தைகள் உட்பட ஆறு பேர் கொண்ட குடும்பம் சுற்றுலா சென்றது. அருவிக்கு செல்வதற்கு முன் சாலையின் குறுக்கே காட்டாறு குறுக்கிடும். இவர்கள் காரை மேலே நிறுத்திவிட்டு ஆற்றுக்குள் இறங்கி நின்றுள்ளனர். அப்போது மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த கனமழையால் திடீர் என்று காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து, குழந்தைகள் உட்பட ஆறு பேரும் வெள்ளத்தில் சிக்கி உயிருக்கு போராடினர்.
அவர்களது அலறல் சத்ததை கேட்ட அருகில் வசிக்கும் பட்டதாரி இளைஞர் கிருஷ்ணன் (21), அக்கம்பக்கத்தினரை அழைத்து கொண்டு சென்றார். தன் உயிரையும் பொருட்படுத்தாது இடுப்பில் கயிற்றை கட்டி கொண்டு பாலத்தில் இருந்து இறங்கி, காட்டாற்று வெள்ளத்தில் தவித்த 3 குழந்தைகளை முதலில் மீட்டு மேலே கொண்டு வந்து சேர்ந்தார். அவரது வயிற்று பகுதியில் கயிறு இறுகியதாலும், தண்ணீரில் நீந்தி சென்றதாலும் கிருஷ்ணன் மயக்கமடைந்து விழுந்தார்.
உடனடியாக அவரை நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதற்கிடையே ஊர் மக்கள் சேர்ந்து எஞ்சிய 3 பேரையும் போராடி மீட்டனர். உயிரை பொருட்படுத்தாமல் 3 குழந்தைகள் உயிரைகாப்பாற்றிய கிருஷ்ணனை அனைவரும் பாராட்டினர்.