ஐந்து வர்த்தமானிகள் தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழுவில் பரிசீலனை

பாராளுமன்றத்தின் அனுமதிக்காக முன்வைக்கப்படவுள்ள ஐந்து வர்த்தமானிகள் தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழுவில் பரிசீலனை செய்யப்பட்டதுடன், 4 வர்த்தமானிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி. சில்வா தலைமையில் அண்மையில் (20) கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுவில் குறித்த வர்த்தமானிகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வை அடுத்து இந்த அனுமதி வழங்கப்பட்டது.

இதற்கமைய, 2005 ஆம் ஆண்டு 6 ஆம் இலக்க சட்டத்தினால் திருத்தப்பட்ட 2022 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்க பெறுமதி சேர் வரிச் சட்டத்தின் கீழான கட்டளை அடங்கிய 2282/26 இலக்க வர்த்தமானி அறிவித்தலுக்கு குழுவின் அனுமதி வழங்கப்பட்டது. பெறுமதி சேர் வரியை (VAT) 12 % ஆக அதிகரிப்பதற்கு இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

2277/62 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட மதுவரிக் கட்டளை சட்டத்தின் கீழான கட்டளை தொடர்பிலும் இதன்போது பரிசீலனை செய்யப்பட்டது. போத்தலில் அடைக்கப்பட்ட கள் லீற்றர் ஒன்றுக்கு 50 ரூபாய் தீர்வை அறவிடுவது தொடர்பாக இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதுடன், இதற்கும் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.

2272/53 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 2003 ஆம் ஆண்டு 25 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் கீழான கட்டளை தொடர்பிலும் குழுவில் பரிசீலனை செய்யப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது. இரத்மலானை விமான நிலையத்திலிருந்து விமானத்தின் மூலம் இலங்கையிலிருந்து புறப்படும் ஒரு நபரிடமிருந்து அறவிடும் தொகையை 30 அமெரிக்க டொலர்களாக குறைப்பதற்கு இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டது.

இதேவேளை, 2017 ஆம் அண்டு 12 ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழான 2296/12 ஆம் இலக்க ஒழுங்குவிதி இங்கு பரிசீலிக்கப்பட்டதுடன், 2021 ஜூன் 30 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2234/19 இலக்க வர்த்தமானியிலுள்ள ஒழுங்குவிதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள 24 மாதங்கள் காலத்தை 36 மாதங்களாக அதிகரித்தல் இதன் நோக்கமாகும்.

1969ம் ஆம் ஆண்டு முதலாம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 2296/30 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியிலுள்ள ஒழுங்குவிதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள ‘குந்தியிருந்து மலங்கழிக்கும் பாத்திரம்’ (Squatting pans) இறக்குமதிக்கு தற்காலிகமாக தடை விதித்துள்ளமை குறித்து குழுவில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. கைத்தொழில் அமைச்சினால் பரிந்துரைக்கப்பட்டதற்கு அமைய உள்நாட்டு உற்பத்திகளுக்கு சந்தையை விரிவுபடுத்தும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் இதன்போது சுட்டிக்காட்டினர். எனினும் இந்தப் பொருளை இறக்குமதி செய்வதற்குச் செலவுசெய்யப்பட்டுள்ள அந்நியச் செலாவணி ஒப்பீட்டளவில் குறைவாக காணப்படுவதாலும் சந்தையில் இந்தப் பொருளுக்கான பற்றாக்குறையும் விலை உயர்வும் பொதுமக்களுக்குத் தாங்கிக்கொள்ள முடியாது என்பதாலும் இறக்குமதியைக் கட்டுப்படுத்துவது பொருத்தமானதல்ல என குழுவில் கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய, இது தொடர்பில் எதிர்வரும் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

விரைவாக இந்த வர்த்தமானி அறிவித்தலை அனுமதிக்காக முன்வைப்பதன் தேவை குறித்து குழு உரிய அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டியது.

இந்தக் கூட்டத்தில் அமைச்சர் நலின் பிரனாந்து, இராஜங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன், பாராளுமன்ற உறுப்பினர்களான அநுர பிரியதர்ஷன யாபா, மயந்த திசாநாயக்க, ஹர்ஷண ராஜகருணா மற்றும் பேராசிரியர் ரஞ்சித் பண்டார மற்றும் அரச அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.