வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சிட்னி : கத்தார் விமான நிலையத்தில், துப்பாக்கி முனையில் பிறப்புறுப்பு சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஐந்து பெண்கள், கத்தார் அரசு மீதும், ‘கத்தார் ஏர்வேஸ்’ நிறுவனத்தின் மீது வழக்கு தொடர முடிவு செய்துள்ளனர்.
கடந்த 2020 அக்டோபரில், மேற்காசிய நாடான கத்தாரின் தோஹா விமான நிலைய பெண்கள் கழிவறையில், பிறந்த குழந்தை ஒன்று கேட்பாரற்று கிடந்தது. இதையடுத்து குழந்தைய விட்டு சென்ற தாயை தேடும் பணியில் விமான நிலைய அதிகாரிகள் ஈடுபட்டனர்.
கத்தார் நாட்டில் திருமணம் ஆகாமல் குழந்தை பெற்றுக் கொள்வது கொடுங்குற்றமாக கருதப்படுகிறது. அப்படி குழந்தை பெற்றது தெரிந்தால் சம்பந்தப்பட்ட பெண் சிறையில் அடைக்கப்படுவார்.
![]() |
இந்த சம்பவம் நடந்த நேரத்தில், கத்தாரில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி செல்ல, ‘கத்தார் ஏர்வேஸ்’ விமானம் தயாராக இருந்தது. அந்த விமானத்தில் இருந்த ஐந்து ஆஸ்திரேலிய பெண்கள் விமானத்தை விட்டு கீழே இறக்கப்பட்டனர். அவர்களை அழைத்து சென்ற அதிகாரிகள், 5 பெண்களின் ஆடைகளை களைந்து பிறப்புறுப்பு சோதனை செய்தனர்.
ஆரம்பத்தில் அந்த பெண்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்டு சோதனை நடந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து ஐந்து பெண்களும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர். கத்தார் விமான நிலைய அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்தனர்.
இதை தொடர்ந்து நடந்த சம்பவத்துக்கு விமான நிலைய அதிகாரிகள் மன்னிப்பு கோரினர். இந்த பரிசோதனைக்கு உத்தரவிட்ட அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டதுடன் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், இந்த சம்பவம் மன ரீதியாக தங்களை கடுமையாக பாதித்துள்ளதால், கத்தார் அரசு மற்றும் கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் மீது நஷ்டஈடு கோரி வழக்கு தொடர ஐந்து பெண்களும் முடிவு செய்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement