கருணாநிதியின் ஆட்சியில் 1996ம் ஆண்டு தொழில்துறையில் இருந்து தனியாகப் பிரித்து தகவல் தொழில்நுட்பத் துறை உருவாக்கப்பட்டது. தமிழக அரசுக்கு தேவையான மின்னணு உபகரணங்களைக் கொள்முதல் செய்யவும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை தமிழகத்தில் முதலீடு செய்ய ஊக்குவிக்கவும் எல்காட் நிறுவனம் உருவாக்கப்பட்டது. ஆனால் தற்போது அமைந்துள்ள ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் இந்த நிறுவனம் புறந்தள்ளப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஒவ்வோரு ஆண்டும் எல்காட் நிறுவனத்தின் மூலம் மின்னணு உபகரணங்களுக்கு விலை பட்டியலை தயாரித்து வெளியிடப்படும். கம்ப்யூட்டர்களுக்கு தேவையான பிராசஸர்களை சப்ளை செய்யும் நிறுவனங்கள், கேமராக்கள், பிரின்டர், புரொஜெக்டர்களை அளிக்கும் மின்னணு நிறுவனங்கள் எல்காட் தயாரிக்கும் விலைப்பட்டியலுக்கு ஏற்ப டெண்டரில் பங்கேற்று தரம் மற்றும் தகுதியின் அடிப்படையில் பட்டியலில் முன்னிலை பெரும். இதன் காரணமாக தமிழக அரசிற்கு பல கோடி ரூபாய் மிச்சமாகும்.
ஆனால் இந்த கொள்முதல் நடைமுறையில் வெளிப்படை தன்மை இருப்பதால் கமிஷன் எதிர்பார்க்க முடியாது. இதன் காரணமாக எல்காட் நிறுவனத்தை அதிகாரத்தில் இருக்கும் சிலர் ஓரங்கட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் பேருந்துகளில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்துவதற்கு ‘நிர்பயா’ திட்டத்தின் கீழ் கேமரா கொள்முதல் செய்யப்பட்டது. அந்த கேமராக்கள் பலவும் தற்பொழுது பழுதடைந்துவிட்டன. எல்காட் மூலமாக கொள்முதல் செய்திருந்தால் தரக் குறைவு நிச்சயம் ஏற்பட்டிருக்காது என எல்காட் நிறுவன அதிகாரிகளே வேதனை தெரிவிப்பதாக சொல்லப்படுகிறது.
இதேபோன்று நியாய விலை கடைகளில் முக அங்கீகார கருவி (Facial Recognition System) பயன்படுத்தி பதிவுசெய்யும் முறை நடைமுறைக்கு வர உள்ளது. இதற்கான உபகரணங்கள் டெண்டரை அந்தத் துறையே மேற்கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அதே போன்று மின்சாரத்துறையில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் ஒப்பந்தத்தையும் மின்சார துறை மேற்கொள்ள உள்ளது.
இதேபோன்று உள்ளாட்சித்துறை, பள்ளிக்கல்வித் துறை என அந்தந்த துறைகளே தன்னிச்சையாக டெண்டர்களை அறிவித்து கொள்முதல் செய்துகொள்கின்றன. இதன் காரணமாக மின்னணு சாதனங்கள் கொள்முதலில் பல கோடி ரூபாய் கமிஷன் கை மாறுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக எல்காட் நிறுவனத்தை திமுக அரசு கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது.
திமுக ஆட்சி அமைந்தவுடன் நடந்த முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் அரசுத் துறைகளுக்குத் தேவையான மின்னணு உபகரணங்களை எல்காட்’ மூலமாகவே கொள்முதல் செய்யவேண்டும் ஸ்டாலின் கண்டிப்புடன் கூறியிருந்தார். ஆனால் அந்த கண்டிப்பு அமைச்சரவை கூட்டத்திலிருந்து வெளியே வந்தவுடன் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல நலத்திட்டங்களை திமுக ஆட்சி அமைந்த உடன் மூடு விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கருணாநிதியின் கனவு திட்டமான எல்காட் நிறுவனம் கமிஷன் பிரச்சனையால் அரசு துறைகளே ஓரங்கட்டி மூடு விழா நடத்த உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.