கோவில்பட்டியிலிருந்து சங்கரன்கோயில் செல்லும் சாலையில் கோவில்பட்டியிலிருந்து 20 KM தொலைவில் கழுகாசலமூர்த்தி திருக்கோயில் அமைந்துள்ளது.
இத்தலத்தில் முருகன் நான்கு அடி உயரத்தில் அமர்ந்த நிலையில் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். கந்த புராணத்தில் முருகன் மேற்கு முகமாக உள்ள தலங்கள் மூன்று என்றும் அதில் ராஜபோகமாக வீற்றிருக்கும் தலம் கழுகுமலை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மலையை குடைந்து, கோயிலை மலைக்குள் அமைத்திருப்பது இக்கோயிலின் சிறப்பாகும்.
இந்த குடைவரைக்கோயிலுக்கு மலையே கோபுரமாக அமைந்துள்ளது. இக்கோயிலை சற்றி வர வேண்டுமானால் மலையையே சுற்றி வர வேண்டும். இத்தலத்தில் இந்திரனே முருகனின் மயிலாக இருப்பது சிறப்பாகும். அதனால் மயிலின் முகம் முருகனுக்கு இடப்பக்கமாக உள்ளது. இத்தலத்தில் முருகனோடு குருவாகிய தக்ஷிணாமூர்த்தியும் இருப்பதால் குருமங்கள தலம் என்றும் அழைக்கபடுகிறது. இத்தலத்து இறைவனை அகத்தியர் தினமும் பூஜிப்பதாக ஐதீகம். இராவணனால் கொல்லப்பட்ட ஜடாயுவின் தம்பியான சம்பாதி என்ற கழுகு முக முனிவருக்கு முருகன் முக்தியளித்த தலம் இதுவேயாகும். அதனாலேயே முனிவரின் பெயரால் கழுகுமலை என்று அழைக்கப்படுகிறது. முருகன் சூரனை வதம் செய்ய திருசெந்தூர் செல்லும் வழியில் இங்கு வந்து தங்கியிருந்தார் என்பது இத்தலத்தின் மேலுமொரு சிறப்பாகும்.
இத்தலத்து முருகனை வேண்டினால் திருமணத் தடை நீங்குமென்பதும், குழந்தை பாக்கியம் கிட்டும் என்பதும் நம்பிக்கை.