புதுடெல்லி: லடாக்கில் கார்கில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி, ‘இந்தியா முதலில் போரை விரும்புவதில்லை; கடைசி முயற்சியாகவே அதனைப் பரிசீலிக்கும்,’ என்று தெரிவித்தார். பிரதமராக பதவியேற்ற பின்னர், ஒவ்வொரு தீபாவளியையும் பிரதமர் மோடி ராணுவ வீரர்களுடன் கொண்டாடி வருகிறார். அந்த வகையில், இம்முறை தீபாவளி பண்டிகையை கொண்டாட அவர் நேற்று முன்தினம் கார்கில் சென்றார். கார்கில் போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பிரதமர் மோடி தன் கையால் வீரர்களுக்கு இனிப்புகளை ஊட்டி விட்டு தீபாவளியைக் கொண்டாடினார்.
வீரர்கள் இடையே அவர் ஆற்றிய உரை வருமாறு: தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவதே தீபாவளி பண்டிகையின் அர்த்தம். கார்கில் போர் தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. கார்கிலில் நடந்த போரில் இந்திய படை தீவிரவாதத்தை முறியடித்தது. அந்த வெற்றி முழக்கம் இப்போதும் எல்லா இடங்களிலும் எதிரொலிக்கிறது. இந்தியா முதலில் போரை விரும்புவதில்லை. இலங்கை போராக இருந்தாலும், குருஷேத்ரா போராக இருப்பினும் (ராமாயணம், மகாபாரத போர்) அதனை கடைசி முயற்சியாகவே பரிசீலிக்கும். ஆனால், வலிமை இல்லாமல் அமைதியை அடைய முடியாது. புதிய தொழில்நுட்பங்கள், உத்திகளை பயன்படுத்துவது, எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது, பாதுகாப்பு படைகளில் பெண்களுக்கு வாய்ப்பளிப்பது உள்ளிட்ட சீர்திருத்தங்களில் அரசு கவனம் செலுத்தி வருகிறது.
பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் 400-க்கும் மேற்பட்ட உபகரணங்களை இறக்குமதி செய்யாமல், உள்நாட்டிலேயே தயாரிக்கும் முடிவெடுத்த முப்படைகளையும் பாராட்டுகிறேன். நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருந்த அடிமைத் தனத்தில் இருந்து நாடு தற்போது விடுபட்டு வருகிறது. ராணுவ வீரர்களின் மத்தியில் இருப்பது எனது தீபாவளியை சிறப்பாக்கி உள்ளது. எல்லைகளை வீரர்கள் பாதுகாப்பதால் தான் ஒவ்வொரு இந்தியனும் நிம்மதியாக தூங்க முடிகிறது. வீரர்களின் தியாகங்கள் நாட்டை எப்போதும் பெருமைப்படுத்துகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.