குண்டுவெடிப்பு… கேரள சிறை… ரகசிய சந்திப்பு… ஜமேஷா முபின் பற்றி பகீர் தகவல்!

கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள சங்கமேஸ்வரர் கோயில் அருகே காரில் இருந்த சிலிண்டர் வெடித்த விஷயம் தான், தமிழகம் முழுவதும் தலைப்பு செய்தியாக பேசப்பட்டு வருகிறது. இது எதிர்பாராத விபத்தா? இல்லை சதிச் செயலா? எனப் பல்வேறு கோணங்களில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் கார் வெடித்த இடத்தில் கிடைத்த ஆணிகள், கோலி குண்டுகள், பாஸ்பரஸ் இரும்பு குண்டுகள் ஆகியவை சந்தேகத்தை அதிகப்படுத்தின.

இந்த விபத்தில் பலியான ஜமேஷா முபின் (25) குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர் கோட்டைமேடு எச்.எம்.பி.ஆர் தெருவைச் சேர்ந்தவர். என்ஜினீயரிங் பட்டதாரி. பழைய துணிகளை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். இவரது வீட்டில் நடத்திய சோதனையில் வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் பொட்டாசியம் குளோரைடு, அலுமினியம் நைட்ரேட், சல்பர் உள்ளிட்ட பொருட்கள் கண்டறியப்பட்டன.

பின்னர் வீட்டின் அருகே உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், ஜமேஷா முபின் வீட்டிலிருந்து அவர் உட்பட 5 பேர் ஒரு மூட்டையை தூக்கிக் கொண்டு வெளியே வருவது தெரியவந்தது. எனவே மற்ற 4 பேரை பிடித்தால் உண்மை வெளிவரும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்த 5 பேரை போலீசார் இன்று காலை கைது செய்தனர்.

அவர்கள் உக்கடத்தைச் சேர்ந்த முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), ஜி.எம். நகரைச் சேர்ந்த முகமது ரியாஸ் (27), பிரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26) ஆகியோர் ஆவர். இவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஜமேஷா முபின் வீட்டில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட மர்ம மூட்டையில் இருந்த பொருட்கள் என்ன? எங்கே அந்த மூட்டைகள்?

தாக்குதல் திட்டம் என்றால் எப்படிப்பட்ட தாக்குதல்? எனப் பல்வேறு கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்டு விசாரித்து வருவதாக தெரிகிறது. கைதானவர்கள் அளித்த வாக்குமூலத்தில், தனது வீட்டை காலி செய்ய வேண்டும் என்று ஜமேஷா முபின் தங்களை அழைத்ததாகவும், அவருக்கு உதவி செய்ய சென்றதாகவும் தெரிவித்தனர். ஆனால் போலீசார் அதனை ஏற்கவில்லை.

மாறி மாறி கேள்விகளால் துளைத்து விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. இந்த வழக்கு தமிழக போலீசாரிடம் இருந்து தேசிய புலனாய்வு முகமையிடம் (NIA) ஒப்படைக்கப்பட வாய்ப்புள்ளதாக பேச்சு அடிபடுகிறது. இந்நிலையில் ஜமேஷா முபின் குறித்து அதிர்ச்சியூட்டும் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இவர் கேரள சிறையில் உள்ள முகமது அசாருதீனை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தனது வாட்ஸ்-அப்பில் ஸ்டேட்டஸாக ஜமேஷா முபின் வைத்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இதில் முகமது அசாருதீன் என்பவர் 2019ஆம் ஆண்டு இலங்கை தேவாலய குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மூன்று பேரில் ஒருவர். இவரை சந்திக்க தான் ஜமேஷா முபின் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் வழக்கு விசாரணை பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.