புருலியா-மேற்கு வங்கத்தை சேர்ந்த, 15 வயது சிறுமி தனக்கு திருமண ஏற்பாடு நடப்பதை அறிந்து, குழந்தைகள் உதவி மையத்துக்கு தகவல் தெரிவித்து, திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு புருலியா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த, 15 வயது சிறுமிக்கு, அவரது பெற்றோர் திருமண ஏற்பாடுகளை செய்தனர்.
இதையறிந்த சிறுமி, மாவட்ட குழந்தைகள் உதவி மைய எண்ணுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தன் திருமணத்தை நிறுத்தும்படி கூறினார்.
சிறுமியிடம் பெயர், முகவரி உள்ளிட்ட விபரங்களை கேட்ட அதிகாரிகள், உடனடியாக அவரது வீட்டுக்கு விரைந்து வந்தனர்.
சிறுமியின் பெற்றோரிடம், 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பது, சட்டப்படி தவறு. எனவே, திருமண ஏற்பாடுகளை கைவிட வேண்டும் என, வலியுறுத்தினர். துவக்கத்தில் மறுத்த அவர்கள், பின், சமாதானம் அடைந்து திருமணத்தை ரத்து செய்தனர்.
![]() |
இது குறித்து அந்த சிறுமி கூறியதாவது:
நாளிதழ்கள் படிப்பதால், 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு திருமணம் செய்வது சட்டப்படி தவறு என்பது எனக்கு நன்றாக தெரியும். மேலும், எனக்கு இப்போது திருமணம் செய்ய விருப்பமில்லை. நர்சுக்கு படித்து, ஏழை மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன்.
இதனால் தான் திருமணத்தை நிறுத்த குழந்தைகள் உதவி மையத்தை அழைத்தேன். முதலில் என் பெற்றோர் கோபமாக இருந்தாலும், பின் நிலைமையை உணர்ந்து, சமாதானமாகி விட்டனர்.
இவ்வாறு சிறுமி கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்