தமிழகத்தையே உலுக்கிய கொடநாடு கொலை கொள்ளை வழக்கானது தற்பொழுது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த உத்தரவினை தமிழக டிஜிபி சில வாரங்களுக்கு முன்பு வழங்கி இருந்தார். அதிமுக ஆட்சியில் நடைபெற்ற இந்த கொலை வழக்கு தற்பொழுது திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து அதிதீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் தலைமையில் ஐந்து தனிப்படையினர் கோவை, சென்னை, சேலம் உட்பட பல மாவட்டங்களில் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கில் கடந்த ஆட்சியில் விசாரணை செய்யாத புது சாட்சிகள் தற்பொழுது நடைபெற்ற விசாரணையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
காவல்துறை சார்பில் நடத்தப்பட்ட விசாரணையில் முக்கிய நபர்களை குற்றவாளிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக கொடநாடு கொலை கொள்ளை வழக்கு சில தினங்களுக்கு முன்பு சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் மேற்கு மண்டல ஐஜி தலைமையிலான தனிப்படைகள் விசாரித்த சேகரித்த அனைத்து ஆவணங்களும் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கை பொருத்தவரை கொடநாட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்கைத் தவிர சேலம் ஆத்தூரில் நடைபெற்ற இதர வழக்குகளும் சேர்த்து ஒரே வழக்காக சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு மூன்று சிபிசிஐடி அதிகாரிகள் கொடநாடு பங்களாவிற்கு சென்ற 4 மணி நேரம் ஆய்வு நடத்தியுள்ளனர். மேலும் கொடநாடு பங்களா மேலாளர் நடராஜன் மற்றும் கணக்காளர், காசாளர், கொடநாடு ஊழியர்கள் என பலரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் மேலாளர், கணக்காளர், காசாளர் ஆகியோரிடம் ஓரிரு நாட்களில் மீண்டும் விசாரணை மேற்கொள்ள வருவதாகவும் யாரும் வெளியூர் செல்லக்கூடாது எனவும் சிபிசிஐடி போலீசார் வலியுறுத்தியுள்ளனர். கோடநாடுகளுக்கு சிபிசிஐடியிடம் ஒப்படைத்த பிறகு முதல் முறையாக களத்தில் இறங்கி விசாரணை மேற்கொண்டுள்ளது.