கோவையை சுற்றி வளைக்கும் துணை ராணுவப்படை: பாதுகாப்பு அதிகரிப்பு!

கார் வெடி விபத்தின் எதிரொலியாக கோவை மாநகரில் காவல்துறையுடன் இணைந்து மத்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.

ஞாயிறு (அக்டோபர் 23) அதிகாலை கோவை கோட்டைமேட்டில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கார் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஜமேஷா முபீன் என்பவர் உடல் கருகி பலியானார்.

இதையடுத்து ஞாயிறு அன்று சம்பவ இடத்தில் 11 மணி நேரத்திற்கு மேலாக போலீசார் விசாரணை மற்றும் தடையவியல் ஆய்வு மேற்கொண்டனர்.

இதைத் தொடர்ந்து இறந்தவரின் உடலை கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் பிரேத பரிசோதனைத்துறை தலைவர் மருத்துவர் ஜெபசிங் தலைமையில் மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர்.

அப்போது உதவி ஆணையர் தங்கப்பாண்டி தலைமையிலான போலீசார் பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்தனர்.

பிரேத பரிசோதனையின் போது 13 உடல் பாகங்கள் எடுக்கப்பட்டு மேல் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து கோவை ஜமேசா முபீன் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது மனைவி நஸ்ரத்திடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து ஜமேசாவின் உறவினர்கள் அவரது உடலை வடகோவையில் உள்ள கபர்ஸ்தானில் முறைப்படி அடக்கம் செய்தனர்.

இந்த சூழலில் இந்த வெடி விபத்தின் எதிரொலியாக கோவை மாநகரில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு மற்றும் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைகண்ணன் கோவையில் முகாமிட்டு விசாரனை மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்பார்வையிட்டு வருவதுடன் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் மற்றும் கோவை மாநகர காவல் ஆனையர் பாலகிருஷ்ணன் தலைமையில் இரண்டு டிஐஜி மற்றும் எட்டு மாவட்ட காவல்கண்காணிப்பாளர், 10 மாவட்ட காவலர்களுடன் இணைந்து 240 ( Rapid action force) மத்திய அதிவிரைவு படையினர் என சுமார் 3000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய அதிவிரைவு படையினர் கோவை உக்கடம் மற்றும் கண்ணப்பன் நகர் பகுதிகளில் இரண்டு குழுக்களாக பிரிந்து வஜ்ரா வாகனங்களுடன் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக மக்கள் அதிகம் கூடுமிடங்களான பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையங்களிலும் டவுன்ஹால், உக்கடம், கோட்டைமேடு மற்றும் கரும்புக்கடை போன்ற பகுதிகளிலும் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.