சென்னை: சென்னையில் மூடப்படாமல் இருந்த மழை நீர் வடிகால்வாய் பள்ளத்தில் தவறி விழுந்து தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் இளம் பத்திரிகையாளர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் வடிகால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பல மாதங்களாக இந்த பணிகள் நடைபெற்று வந்தாலும் இன்னும் நிறைவடையவில்லை. முதல்வர், அமைச்சர்கள், சென்னை மேயர் மற்றும் அதிகாரிகள் 70 முதல் 95 சதவீதம் வரை பணிகள் முடிந்துள்ளதாக கூறும் தகவல்களும் கள நிலவரமும் முரண்பாடாக உள்ளன.
தடுப்புகள் இல்லை: வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதால் வடிகால் பணிகளுக்காக தோண்டப்பட்டுள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி பெரிய விபத்துகள் நடப்பதற்கு வாய்ப்புள்ளது. இந்நிலையில், சென்னையில் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றி வந்த உதவி ஆசிரியர் முத்துகிருஷ்ணன் (24) மழைநீர் வடிகால்வாய் பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். அதன் விவரம்: தென்காசி மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (24). சென்னை கந்தன்சாவடி, 3-வது குறுக்குத் தெரு நண்பர்களுடன் அறை எடுத்து தங்கியிருந்தார். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் உதவி ஆசிரியராக பணிபுரிந்தார். கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் பணிக்கு சேர்ந்த இவர், நேற்று முன்தினம் இரவு பணியை முடித்து விட்டு ஈக்காட்டுத்தாங்கலிலிருந்து நடந்து வந்துள்ளார். நள்ளிரவு 12.30 மணியளவில் ஜாபர்கான்பேட்டை 100 அடி சாலை, காசி தியேட்டர் அருகே மழைநீர் வடிகால் பணி நடைபெற்ற இடத்தில் வந்தபோது, வாகனம் ஒன்று வந்ததால் சாலையில் ஒதுங்கியுள்ளார். அப்போது, அங்கு மூடப்படாமல் இருந்த பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார். அரை மணி நேரத்துக்கும் மேல் பள்ளத்தில் தவித்த முத்துகிருஷ்ணனை அந்த வழியாக வந்த காவலர் ஒருவர் மீட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
காயங்களுடன் வந்த அவரை நண்பர்கள் டைட்டல் பார்க்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர், அதிகாலை 4.30 மணிளவில் 108 ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தகவல் அறிந்து மருத்துவமனைக்கு சென்ற சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தேவையான சிகிச்சைகளை உடனடியாக அளிக்க மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார். இதையடுத்து மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். அதன் பிறகு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த முத்துகிருஷ்ணன் சிகிச்சைபலனின்றி நேற்று மதியம் 2.40 மணியளவில் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து எம்ஜிஆர் நகர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தனியார் தொலைக்காட்சி அலுவலக செய்தி பிரிவில் செய்தியாளராக பணியாற்றிய முத்துகிருஷ்ணன், மழைநீர்வடிகால் பள்ளத்தில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார் என்பதை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ஊடகத் துறை நண்பர்களுக்கும் இத்துயர்மிகு நேரத்தில் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சமும், பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதித் திட்டத்தின்கீழ் ரூ.3 லட்சமும் சேர்த்து ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை: முத்துகிருஷ்ணன் உயிரிழந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. அவரது குடும்பத்தாருக்கு தமிழக பாஜக சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். சென்னையில் இது போன்று பல இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவு பெறாமல் எவ்வித பாதுகாப்புமின்றி மக்கள் பயன்படுத்தும் பிரதான சாலைகளில் உயிர்ப்பலி வாங்கும் குழிகளாக மாறி இருக்கின்றன. மக்களை திசை திருப்பும் விதமாக 95 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றுவிட்டதாக கூறிய மேயர், அமைச்சர் மீது நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும். இதேபோன்று விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் முத்துகிருஷ்ணன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். அரை மணி நேரமாக பள்ளத்தில் தவித்தவரை அந்த வழியாக வந்த காவலர் ஒருவர் மீட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார்.