திருப்பதி, திருமலையில் சூரியகிரகணம் காரணமாக ஏழுமலையான் கோவில் நேற்று காலை 8:00 மணிக்கு மூடப்பட்டது.திருமலையில், கிரகண காலங்களில் ஆறு மணிநேரத்திற்கு முன்னர் கோவில் நடை சாத்தப்படுவது வழக்கம்.
இதன்படி நேற்று சூரியகிரகணம் நிகழ்ந்ததால், ஏழுமலையான் கோவில் காலை 8:00 மணி முதல், மாலை 7:00 மணி வரை தொடர்ந்து 11 மணி நேரம் மூடப்பட்டது.
கோவில் மட்டுமல்லாமல், தரிசன வரிசைகள், வைகுண்டம் காத்திருப்பு அறைகள், அன்னதான கூடம், பக்தர்கள் தங்கும் மண்டபங்கள் ஆகியவையும் மூடப்பட்டன.
கிரகணம் நிறைவு பெற்ற பின் அனைத்து இடங்களும் சுத்தப்படுத்தப் பட்டு, புண்ணியாவசனம், சுத்தி சடங்குகளை மேற்கொண்ட பிறகு கோவில் கதவுகள் மீண்டும் திறக்கப்பட்டன.
இதையொட்டி வி.ஐ.பி., பிரேக் தரிசனம், 300 ரூபாய் விரைவு தரிசனம், கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை மற்றும் சஹஸ்ர தீபாலங்காரம் போன்ற ஆர்ஜித சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்தது.
மூத்த குடிமக்கள், உடல் ஊனமுற்றோர் மற்றும் கைக்குழந்தைகளுடன் உள்ள பெற்றோர், வெளிநாடு வாழ் இந்தியர்கள், பாதுகாப்புப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து சலுகை பெற்ற தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டன.வைகுண்டம், இரண்டு வழியாக கோவில் கதவுகள் மீண்டும் திறக்கப்பட்ட பின், சர்வ தரிசன யாத்ரீகர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
திருச்சானுார் பத்மாவதி தாயார் கோவில் கோதண்டராமர் கோவில், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோவில், அப்பளாய்குண்டா பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோவில் உள்ளிட்ட கோவில்கள் மூடப்பட்டதுடன் அக்கோவில்களில் தரிசனம் முற்றிலும் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மூத்த குடிமக்களுக்கான ‘டோக்கன்’ வெளியீடு
திருமலை திருப்பதி தேவஸ்தானம் மாதந்தோறும் அனைத்து விதமான தரிசன டிக்கெட்டுகளையும் இணையதள முன்பதிவு வாயிலாக வெளியிட்டு வருகிறது. இதன்படி வரும் நவம்பர் மாதத்திற்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான தரிசன டிக்கெட்டுகள் இன்று மதியம் 3:00 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.பக்தர்கள் முன்பதிவு செய்து பயன்பெறலாம். அவர்களுக்கு தினசரி மாலை 3:00 மணிக்கு தரிசன அனுமதி வழங்கப்படும். இதற்காக பக்தர்கள் www.tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்