புதுடெல்லி: டெல்லியில் உள்ள ஓட்டலில் தீபாவளி கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக சூதாடிய 7 பெண்கள் உட்பட 29 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தலைநகர் டெல்லியின் கிளப் ரோடு பஞ்சாபி பாக் அருகே அமைந்துள்ள சிட்டி வெஸ்ட் எண்ட் என்ற ஓட்டலில் சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பலை கையும் களவுமாக பிடித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.58.57 லட்சத்தை மீட்டனர். இதுகுறித்து போலீஸ் டிசிபி கன்ஷ்யாம் பன்சால் கூறுகையில், ‘தீபாவளி பண்டிகையையொட்டி சூதாட்ட கும்பல் ஆங்காங்கே குழுவாக சேர்ந்து சூதாட்டம் நடத்துவது தெரியவந்தது.
அதையடுத்து சிட்டி வெஸ்ட் எண்ட் ஓட்டலில் சூதாட்டம் அமோகமாக நடப்பதாக தகவல் கிடைத்தது. அந்த ஓட்டலை சுற்றி வளைத்த போது, 7 பெண்கள் உட்பட 29 பேர் கும்பல் சூதாடிக் கொண்டிருந்தது. அவர்களை கையும் களவுமாக கைது செய்துள்ளோம். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.58.57 லட்சத்தை கைப்பற்றினோம். ஓட்டலுக்குள் சூதாட்டத்தை அனுமதித்ததற்காக ஓட்டலின் மேலாளர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.