நம்மை ஆண்ட பிரிட்டனை ஆள்கிறார் நம் நாட்டு மருமகன்| Dinamalar

லண்டன்,:பிரிட்டனின் புதிய பிரதமராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக், 42, நேற்று பொறுப்பேற்றார். பழமைவாத கட்சித் தலைவருக்கான போட்டியில் வெற்றி பெற்ற பின், பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லசை சந்தித்து பிரதமர் பொறுப்பை ஏற்றார். ”தவறுகளை சரி செய்து நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதே இலக்கு,” என, செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார். ஒரு காலத்தில் நம்மை ஆண்ட பிரிட்டனை, இன்று நம் நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஆள்வது இந்தியர்களுக்கு பெருமைமிக்க தருணமாக அமைந்துள்ளது. மேலும், பிரிட்டனை ஆளும் முதல் ஹிந்து என்ற பெருமையையும் ரிஷி சுனக் பெற்றுள்ளார்.

ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமர் பதவியை, போரிஸ் ஜான்சன் கடந்த ஜூலையில் ராஜினாமா செய்தார். ஆளும் பழமைவாத கட்சியின் தலைவராக இருப்பவரே பிரதமராக முடியும்.

latest tamil news

இதையடுத்து நடந்த தேர்தலில், இந்திய வம்சாவளியான முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக்கை வென்று, முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் லிஸ் டிரஸ் பிரதமரானார். ஆனால், அவர் மேற்கொண்ட பொருளாதார நடவடிக்கைகள், நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தின.

இதையடுத்து, 45 நாட்கள் மட்டுமே பிரதமர் பதவியில் இருந்த லிஸ் டிரஸ், அந்த பதவியில் இருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார். இதையடுத்து, கட்சியின் புதிய தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுவதாக ரிஷி சுனக் அறிவித்தார்.

அவரை எதிர்த்து போட்டியிடுவதாக அறிவித்த போரிஸ் ஜான்சன் பின் வாங்கினார்.

மற்றொரு போட்டியாளரான பென்னி மோர்டார்ட்க்கு போதிய ஆதரவு இல்லை. இதனால் ரிஷி சுனக், போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, பிரிட்டனின் பிரதமராகும் தகுதியை அடைந்தார்.

லிஸ் டிரஸ் தன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதற்கு முன்னதாக, லண்டனின் 10, டவுனிங் தெருவில் உள்ள பிரதமர் இல்லத்தில், இறுதியாக கேபினட் கூட்டத்தை கூட்டினார். அதன் பின், பக்கிங்ஹாம் அரண்மனை சென்று, பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லசிடம், தன் ராஜினாமா கடிதத்தை முறைப்படி அளித்தார்.

latest tamil news


latest tamil news

அதன் பின், ரிஷி சுனக் பக்கிங்ஹாம் அரண்மனை வந்து, மன்னரை சந்தித்தார். அப்போது, ரிஷி சுனக்கிடம் பிரதமர் பொறுப்பை ஏற்கும்படி, மன்னர் கேட்டுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து மன்னரின் கைகளில் முத்தமிட்ட ரிஷி சுனக் அவரது கோரிக்கையை ஏற்று, பிரிட்டனின் 57வது பிரதமராக பொறுப்பேற்றார். அந்நாட்டின் மிக இளம் வயது பிரதமர் என்ற பெருமையையும், முதல் ஹிந்து பிரதமர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

அதன்பின், 10 டவுனிங் தெருவில் உள்ள பிரதமர் இல்லத்தின் வாயிலில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ரிஷி சுனக் கூறியதாவது:

நம் நாடு, மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளது; கொரோனா பெருந்தொற்று, ரஷ்யா – உக்ரைன் போர் போன்ற அடுத்தடுத்த சம்பவங்களால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் நாட்டின் பிரதமராக நான் நியமிக்கப்பட்டு உள்ளேன்.

இன்றைய நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. எனவே, என் பணி உடனடியாக துவங்குகிறது. கடினமான முடிவுகள் எடுக்கப்பட வேண்டிய தேவை உள்ளது. இரவு பகல் பாராமல் உழைப்பேன். என் நிர்வாகத்தின் வாயிலாக நாட்டை ஒருங்கிணைப்பேன். மக்களின் நம்பிக்கையை பெறுவேன். தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன்.

பிரதமர் பதவிக்கான பொறுப்பு மற்றும் கடமைகளை உணர்ந்து, பழமைவாத கட்சியின் கோட்பாடுகளை நிறைவேற்றுவேன். பிரிட்டனின் பொருளாதாரத்தை உயர்த்துவது தான் இலக்கு. குழப்பங்களுக்கு மத்தியில் நான் பேசுவதை விட, என் செயல் பேசும். நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்த லிஸ் டிரஸ் விரும்பியதில் தவறில்லை.

மாற்றத்தை உருவாக்குவதற்கான அவரது முயற்சிக்கு பாராட்டுக்கள். ஆனால், சில தவறுகள் நிகழ்ந்தன. தவறுகள் இருந்தாலும் அதில் கெட்ட எண்ணங்கள் இல்லை. அந்த தவறுகளை சரி செய்யவே நான் கட்சி தலைவராகவும், பிரதமராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளேன்.

சிறந்த எதிர்காலத்திற்கு, பிரிட்டனை வழிநடத்தி செல்லவும், அரசியலுக்கு அப்பாற்பட்டு உங்கள் தேவைகளை நிறைவேற்றவும், கட்சியின் மிகச் சிறந்த மரபுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசை உருவாக்கவும் தயாராக உள்ளேன். நாம் ஒன்று சேர்ந்து உழைத்தால், நம்ப முடியாத இலக்குகளை அடைய முடியும்.பலர் செய்த தியாகங்களுக்குத் தகுதியான எதிர்காலத்தை உருவாக்குவோம். நாளையும், அதன் பின் ஒவ்வொரு நாளையும், நம்பிக்கையுடன் நிரப்புவோம்.இவ்வாறு அவர் பேசினார்.ரிஷி சுனக்குக்கு முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் வாழ்த்து தெரிவித்தார்.

”வரலாற்று சிறப்புமிக்க இந்த நாளில் ரிஷி சுனக்கிற்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பழமைவாத கட்சியை சேர்ந்த அனைவரும் புதிய பிரதமருக்கு தங்கள் முழு ஒத்துழைப்பையும் ஆதரவையும் அளிக்க வேண்டும்,” என, அவர் கூறியுள்ளார்.

ரிஷி சுனக்கின் பெற்றோர், இந்தியாவை சேர்ந்தவர்கள். பணி நிமித்தமாக அந்நாட்டுக்கு சென்றனர். அவரது தந்தை டாக்டராகவும், தாய் மருந்தாளுனராகவும் பணியாற்றி வந்தனர்.

கடந்த, 1980ல் பிரிட்டனில் பிறந்த ரிஷி, அங்கேயே படித்து வளர்ந்தார். பிரிட்டனின் புகழ் பெற்ற வின்செஸ்டர் பள்ளியில் படித்தார். அதன் பின் ஆக்ஸ்போர்டு பல்கலையில் பட்டப்படிப்பு முடித்து, ‘கோல்டுமேன் சாக்ஸ்’ குழுமத்தில் மூன்றாண்டுகள் பணியாற்றிய பின், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலையில் எம்.பி.ஏ., படித்தார்.

அங்கு தன்னுடன் படித்த, ‘இன்போசிஸ்’ துணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகள் அக் ஷதா மூர்த்தியை காதலித்தார். இருவருக்கும், 2009ல் பெங்களூரில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு கிருஷ்ணா, அனுஷ்கா என்ற இரு மகள்கள் உள்ளனர்.

பிரிட்டனின் முதல் இந்திய மற்றும் ஹிந்து பிரதமராக தேர்வாகியுள்ள ரிஷி சுனக், எப்போதும் தன்னை ஹிந்துவாக அடையாளப்படுத்தி கொள்வதில் பெருமை கொள்வதாக கூறுவார். ஒரு காலத்தில் நம்மை ஆண்ட பிரிட்டனை, இன்று நம் நாட்டை சேர்ந்த ஒருவர் ஆள்வது இந்தியர்கள் பெருமை கொள்ளும் தருணமாக அமைந்துள்ளது.

ரிஷிக்கு என் வாழ்த்துகள். அவர் பிரதமராக பொறுப்பேற்றதில் பெருமை அடைகிறோம். அவர் வெற்றி பெற வாழ்த்துகிறோம். பிரிட்டன் மக்களின் நலனுக்காக அவர் சிறப்பான பங்களிப்பை தருவார் என்ற நம்பிக்கை உள்ளது.நாராயண மூர்த்தி, துணை நிறுவனர், இன்போசிஸ்

மாமனாரின் வாழ்த்து!

புனித கயிறு கட்டியுள்ள சுனக்

ஹிந்துக்கள் சிவப்பு, மஞ்சள், பச்சை உள்ளிட்ட வண்ணங்களில் புனித கயிறு அணிவது வழக்கம். தங்கள் இஷ்ட தெய்வத்திடம் பிரார்த்தனை செய்து, இந்தக் கயிற்றை வலது கை மணிக்கட்டில் கட்டிக் கொள்வர். இது எதிரிகளிடமிருந்து தங்களை காப்பதாக அவர்கள் நம்புகின்றனர். இந்நிலையில், பிரிட்டன் பிரதமராக பொறுப்பேற்றுள்ள ரிஷி சுனக், கையில் சிவப்பு கலர் புனித கயிறு அணிந்துள்ளார். மன்னர் மூன்றாம் சார்லசை சந்தித்த போதும், பிரதமர் இல்ல வாசலில் நின்று பொதுமக்களை பார்த்து கை அசைத்த போதும் அவர் அணிந்துள்ள சிவப்பு கயிறு, பலரின் கவனத்தை கவர்ந்தது.

கடைசி உரை!

லிஸ் டிரஸ் தன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதற்கு முன்னதாக நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இறுதி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவு மற்றும் மன்னர் மூன்றாம் சார்லசின் பதவி ஏற்பின் போது, பிரிட்டன் பிரதமராக பதவி வகித்து நாட்டை வழிநடத்தியதில் பெருமை கொள்கிறேன். கடுமையாக உழைக்கும் குடும்பத்தினருக்காக சில முடிவுகளை அவசரமாகவும், தீர்க்கமாகவும் என் தலைமையிலான அரசு எடுத்தது. ஆயிரக்கணக்கான தொழில் நிறுவனங்கள் திவால் ஆவதை தடுக்க உதவி செய்துள்ளோம். பழமைவாத கட்சியின் தலைவராக போட்டியின்றி தேர்வாகி உள்ள ரிஷி சுனக்கிடம் பிரதமர் பதவியை ஒப்படைக்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.