மேற்கு வங்காளம், புகுலியா மாவட்டம் காசிப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் அருகாமையில் இருந்த பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வந்தாள். அந்தச் சிறுமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிராமத்தில் நடந்த குழந்தை திருமணம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டாள். அப்போது அவர் திருமணம் செய்வதற்கான சட்டப்பூர்வ வயது 18 என்பதை நன்கு அறிந்து கொண்டார்.
இந்த நிலையில், குடும்ப வறுமை காரணமாக சிறுமிக்கு அவருடைய பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். ஆனால் சிறுமிக்கு படிப்பின் மீது ஆர்வம் இருந்ததால், திருமணத்தின் மீது நாட்டமில்லை. இது குறித்து சிறுமி அவளுடைய பெற்றோரிடம் தெரிவித்தும், அவர்கள் அதை பெரிய பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை எனத் தெரிகிறது.

இதையடுத்து, சிறுமி தனக்கு குழந்தை திருமணம் நடக்க உள்ளது பற்றி, குழந்தைகள் நலத்துறையின் அவசர எண் 1098-ஐ தொடர்புகொண்டு தெரிவித்திருக்கிறார். உடனடியாக காசிப்பூர் கிராமத்துக்குச் சென்ற குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் அந்தச் சிறுமியின் பெற்றோரிடம் குழந்தை திருமணம் குறித்தும், அதன் பின்விளைவுகள் பற்றியும் தெரிவித்தனர்.
இதையடுத்து தங்களின் மகளுக்கு குழந்தை திருமணம் செய்யும் முடிவை பெற்றோர் கைவிட்டனர். இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய அந்தச் சிறுமி, “கொரோனா நோய்த்தொற்று காரணமாக என் தந்தையின் வேலை பறிபோனது. குடும்ப வறுமை காரணமாக எனக்கு என் பெற்றோர் குழந்தைத் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். ஆனால் நான் நன்றாக படித்து செவிலியராக வேண்டும் என்பது என்னுடைய கனவு’’ என்றார்.