திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் அமைந்துள்ளது, அருள்மிகு பாளையஞ்சாலைக் குமாரசுவாமி திருக்கோவில். பொதுவாக ஆகம விதிப்படி முருகன் கோவில்களில் மூலவரான சண்முகா் தெற்கு நோக்கி அருள்பாலிப்பாா். ஆனால் இத் கோவிலில் மூலவரான சண்முகர் கிழக்கு நோக்கி ஆறுமுகத்துடனும், பன்னிரு கைகளுடன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் அமைந்து இருப்பது விசேஷமான ஒன்றாகும்.
உற்சவா் ஸ்ரீவள்ளிதெய்வானை சமேத ஆறுமுக நயினாா் தெற்கு நோக்கி அருள்பாலிக்கின்றாா். மேலும் ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத குமரவிடங்கப்பெருமான் மற்றொரு உற்சவராக அருள்பாலிக்கின்றாா். இந்தத் திருத்தலம் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு இணையான ஸ்தலம் என்பதால், இந்தக் கோவிலின் அமைப்பு மற்றும் இங்கு நடைபெறும் பூஜைகள், விழாக்கள் அனைத்தும் அதைப்போன்றே அமைந்திருப்பது தனிச்சிறப்பாகும்.
இந்த வருடத்திற்கான கந்த சஷ்டி சூரசம்ஹார திருவிழா வருகின்ற 4ம்தேதி வரை நடைபெற உள்ளது அதனை முன்னிட்டு இன்று இரவு அங்குராா்ப்பணம் – காப்பு கட்டும் வைபவம் நடைபெற்றது . இதற்காக விநாயகர் சன்னதி முன்பு யாகசாலைக்கான கும்பங்கள் நிறுவப்பட்டு பூஜைகள் நடைபெற்றன அதனைத் தொடர்ந்து எஜமான வர்ணம் சுவாமியிடம் அனுமதி கேட்கும் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து உற்சவர் ஸ்ரீவள்ளி தேவ சேனா சமேத ஆறுமுக நயினாருக்கும் குமரவிடங்கப்பெருமானுக்கும் மற்றும் மூலவருக்கு காப்பு கட்டுதல் நடைபெற்றது தொடர்ந்து உற்சவமூர்த்திகளுக்கு நட்சத்திர ஆரத்தி கோபுர ஆரத்தி காட்டப்பட்டு வந்திருந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
நாளை முதல் கந்த சஷ்டி திருவிழா ஆறு தினங்கள் நடைபெறுகின்றன. விழா நாட்களில் கோயில் முன்பு கலையரங்க மேடையில் கந்தபுராணம் தொடர் சொற்பொழிவு பக்தி மெல்லிசை திருமுறை விண்ணப்பம் போன்றவை நடைபெறும். வருகின்ற 30ம் தேதி கந்த சஷ்டி சூரசம்ஹாரமும், 31ஆம் தேதி திருக்கல்யாணம் அதனைத் தொடர்ந்து நான்கு தினங்கள் ஊஞ்சல் திருவிழா நடைபெறுகின்றன. விழா ஏற்பாடுகளை திருக்கோவில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.