விகடனின் ‘Doubt of common man’ பக்கத்தில் கோமதி என்ற வாசகர் “பிராய்லர் சிக்கன் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா? பெண் குழந்தைகளை அது பாதிக்கிறதா?” என்று கேட்டிருந்தார். அதற்கான பதில் இங்கே.

குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்து வயதினரும் விரும்பி உண்ணக்கூடிய உணவாக பிராய்லர் சிக்கன் உள்ளது. பிராய்லர் சிக்கனை, பிரியாணி, சிக்கன் 65, கிரில் சிக்கன், ப்ரைடு ரைஸ் உள்ளிட்ட பல வடிவில் உணவாக எடுத்துக் கொள்கிறோம். இருப்பினும், மக்களிடையே பிராய்லர் சிக்கன் குறித்து சில வதந்திகளும் அவ்வப்போது எழுந்துகொண்டே இருக்கின்றன. பிராய்லர் சிக்கனை சாப்பிடுவதால் உடலில் ஹார்மோன் பிரச்னைகள் உண்டாகிறது என்றும் பெண் குழந்தைகள் சிறிய வயதிலேயே பருவமடைகின்றனர் என்றும் பொதுப்படையான தகவல்கள் எழுந்த வண்ணமே இருக்கின்றது. இதுகுறித்து, தெளிவான விளக்கத்தைப் பெற ஈரோட்டை சேர்ந்த டாக்டர் அருண்குமாரிடம் பேசினோம். பிராய்லர் சிக்கன் குறித்து அவர் கூறியதாவது,
“பிராய்லர் கோழிக்கு ஹார்மோன் ஊசி செலுத்தப்படுவது உண்மையா?”
“இது முற்றிலும் தவறான தகவல். பிராய்லர் கோழி வளர்வதற்கான ஊட்டச்சத்து நிறைந்த தீவனம் மட்டுமே வழங்குகின்றனர். பிராய்லர் கோழிக்கு ஊசி செலுத்துவது நோய் எதிர்ப்பு சக்திக்காக செலுத்தப்படும் தடுப்பூசியே ஆகும். அது ஹார்மோன் ஊசி அல்ல. ஹார்மோன் ஊசி என்பது வேறு. எந்த ஒரு உயிரினத்தையும் ஹார்மோன் ஊசி செலுத்தி வளர்க்கவே முடியாது. அவ்வாறே, ஒரு கோழிக்கு ஹார்மோன் ஊசி செலுத்த ரூ. 20,000 செலவு ஆகும்.”
“பிராய்லர் கோழி வேகமாக வளரக் காரணம் என்ன?”
“பிராய்லர் சிக்கன் வேகமாக வளர்வதற்கு காரணம், கோழிக்கு செலுத்தப்படும் ஊசி அல்ல. பொதுவாகவே பிராய்லர் கோழிக்கு கால்நடை மருத்துவர்களால் அங்கீகரிக்கப்பட்ட புரதம் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த தீவனம் மட்டுமே வழங்குகின்றனர். இது மட்டுமல்லாது, பிராய்லர் கோழி வளரும் சூழல் மற்றும் தகவமைப்பே இதற்குக் காரணம்.”
இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை இங்கே கிளிக் செய்து பதிவு செய்யுங்க!
“பிராய்லர் சிக்கனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எடை கூடுமா?”
“உண்மையில், பிராய்லர் சிக்கனில் அதிகப்படியான புரதச்சத்து உள்ளது. இதை எடுத்துக் கொள்வதால் உடலுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. இருந்தாலும், பிரியாணி, சவர்மா, ப்ரைட் ரைஸ், மற்றும் பொரித்த சிக்கன் ஆகியவை சாப்பிடும்போது எடை அதிகரிக்கும். சிக்கன் மற்றும் முட்டையை தனியாக உட்கொள்ளும் போது உடல் எடை குறையவே செய்யும், எடை கூடாது. பொதுவாகவே ஒரு உணவை எந்தத் தன்மையில் எடுத்துக் கொள்கிறோம், என்பதை பொறுத்தே உடல் எடை அதிகரிக்கும்.”
“பிராய்லர் சிக்கன் எடுத்துக் கொள்வதால் பெண் குழந்தைகள் சிறு வயதிலேயே பருவமடைகின்றனர் எனத் தெடர்ச்சியாக சொல்லப்படுகிறதே?”
“இது முற்றிலும் அறிவியலுக்கு புறம்பான தகவல். அறிவியல் ரீதியாக சாத்தியம் இல்லாதது. கடந்த நூறு வருடங்களில், உலகம் முழுவதும் இயல்பாகவே பெண் குழந்தைகள் பருவமடையும் வயது 3 முதல் 4 வயது குறைந்துள்ளது. ஒவ்வொரு குழந்தைகளின் உடல் தன்மையைப் பொறுத்து பருவம் அடைகின்றனர். சைவ உணவு சாப்பிடும் பெண் குழந்தைகளும் சிறிய வயதில் பருவமடைகின்றனர். பெண் குழந்தைகள் சிறிய வயதில் பருவமடைய பிராய்லர் சிக்கன் காரணமல்ல.”

“சிக்கனை எந்த முறையில் எடுத்துக் கொள்ளக்கூடாது?”
“எண்ணெயில் பொரித்த சிக்கனை உணவில் எடுத்துக் கொள்ளக்கூடாது. இட்லி, தோசை உள்ளிட்ட மாவுச்சத்து நிறைந்த உணவுப் பொருள்களுடன் எடுத்துக் கொள்ளும் போது உடலுக்கு சில நேரங்களில் தீங்கு விளைவிக்கிறது. இக்காரனத்தினாலே உடல் எடையும் அதிகரிக்கிறது. இதைத் தவிர வேறு எந்த கெடுதலும் பிராய்லர் சிக்கனால் வருவதில்லை.”
இதேமாதிரி உங்களுக்குத் தோன்றும் கேள்விகள், சந்தேகங்களைக் கீழே பதிவு செய்யுங்க!