“மடியில் கனமில்லை வழியில் பயமில்லை!" – ஆறுமுகசாமி அறிக்கை குறித்து விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை அடுத்த கட்டியாவயலில் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான விஜயபாஸ்கர்  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா எங்களை ஆளாக்கியவர். எங்களை உருவாக்கியவர் மட்டுமல்ல, அவர் எங்களுக்கு தெய்வம். கடவுளாக திகழ்ந்தவர், அவர் மீண்டும் குணமாகி நலமோடு வர வேண்டும் என்று வேண்டிய லட்சோப லட்சம் தொண்டர்களில் நானும் ஒருவன். அதிலும் ஒரு அமைச்சராக நான் என் கடமையை முழுமையாக செய்தேன். 

ஆனால், ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் அறிக்கையில் என் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும்  முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை. ஒருதலைபட்சமானது. இதில் அரசியல் உள்நோக்கத்துடன் சொல்லப்பட்ட கருத்துக்கள் என்று ஆணித்தரமாக கூறுகிறேன். 

இந்த ஆணையம் வெளியிட்டுள்ள கருத்துக்கள் அனைத்தும் உண்மைக்கு மாறாக, அதே நேரத்தில் சொன்னதை சொல்லாதது போலவும் சொல்லியதை சொன்னது போலவும் இட்டுக்கட்டி சொல்லி உள்ளனர்.

எங்களைப் பொறுத்தவரை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை இழந்து தவிக்கக் கூடியவர்களுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போன்ற கருத்துக்களாக உள்ளன. பொது வாழ்க்கையில் இருக்கக்கூடிய நாங்கள்  சட்ட வல்லுநர்களுடன் கலந்து பேசி அதை சட்டப்படி நேர்மையாக நெஞ்சுரத்துடன் எதிர்கொள்வோம்.

சுகாதாரத் துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் இந்திய அளவில், உலக அளவில் நேர்மையான, தூய்மையான அதிகாரி, களப்பணியாளர், கொரோனா காலத்தில் இந்த உலகமே உயிர் பயத்தில் வீட்டுக்குள் முடங்கி கிடந்தபோது, நான் களத்தில் இருந்தபோது, உயிரை துச்சம் என நினைத்து ராதாகிருஷ்ணனும் என்னுடன் இணைந்து களப்பணியாற்றினார். அவர் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளும் ஆதாரமற்றவை. நானாக இருக்கட்டும், சுகாதாரத் துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணனாக இருக்கட்டும், யாராகவும் இருக்கட்டும், மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை. இதை சட்டப்படி எதிர்கொள்வோம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.