மூச்சுத் திணறும் சென்னை… எந்தெந்த ஏரியாவுல ரொம்ப மோசம் தெரியுமா?

தமிழகத்தில் நேற்றைய தினம் தீபாவளி பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. கொரோனா பெருந்தொற்றால் இரண்டு ஆண்டுகள் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதுமட்டுமின்றி தனிப்பட்ட முறையிலும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். இதனால் கொண்டாட்டங்களை தவிர்த்து வந்தனர். இந்நிலையில் நடப்பாண்டு இயல்பு நிலை திரும்பியதால் வழக்கமான உற்சாகத்துடன் தீபாவளி கொண்டாடப்பட்டது.

காற்று மாசுபாடு, சுவாசப் பாதிப்புகள் ஆகியவற்றை காரணம் காட்டி தீபாவளி அன்று காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. ஆனால் அதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளாமல் பலரும் விருப்பப்பட்ட நேரத்தில் பட்டாசு வெடித்தனர். மேலும் அதிக அளவில் பட்டாசுகளை வாங்கி வெடித்து தள்ளியதால் காற்று மாசுபாடு அதிகரித்தது.

இந்த புகை அப்படியே சென்னையின் சுற்றுவட்டாரப் பகுதிகளை சூழ்ந்து கொண்டு மக்களை திணறடித்தது. நேற்று இரவு முதல் தற்போது வரை புகையின் தாக்கம் தொடர்ந்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுதொடர்பாக மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் இணையதளத்தில் ஆய்வு செய்கையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

அதில் இன்று காலை 7 மணி நிலவரப்படி சென்னையில் உள்ள ஆலந்தூர் பேருந்து பணிமனை பகுதியில் காற்று தரக் குறியீட்டின் PM 2.5 அளவானது 230, அரும்பாக்கத்தில் 222, காந்தி நகர்_எண்ணூரில் 242, கொடுங்கையூரில் 188, மணலி கிராமப் பகுதியில் 266, மணலியில் 224, ராயபுரத்தில் 243, வேளச்சேரி குடியிருப்பு பகுதிகளில் 195ஆக காணப்படுகிறது.

இதில் கொடுங்கையூர், வேளச்சேரி ஆகியவை மட்டும் பரவாயில்லை என்று சொல்லும் அளவிற்கு காற்று மாசுபாடு இருக்கிறது. மற்ற பகுதிகளில் அனைத்தும் மோசம் என்ற நிலையில் காற்றின் தரம் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அதுவும் நேற்று இரவு 8 மணியில் இருந்து படிப்படியாக அதிகரித்து நள்ளிரவு 12 மணி, அதிகாலை 4 மணி, அதிகாலை 5 மணி ஆகிய நேரங்களில் மாசுபாடு அதிகம் இருந்திருக்கிறது.

இந்நிலையில் காற்று மாசுபாடு காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த குழந்தைகளுக்கு சுவாசப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. உடனடியாக அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.