டாக்கா: வங்கதேசத்தில் சிட்ராங் புயல் காரணமாக 7 பேர் பலியாகினார். வெள்ளம் புகுந்த பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் அப்புறப்படுத்தப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மத்திய வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த சித்ராங் புயல் நேற்று மாலை முதல் மணிக்கு 28 கிமீ வேகத்தில் மேலும் வடக்கு மற்றும் வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்தது. டிங்கோனா தீவு மற்றும் சாண்ட்விப் பகுதிகளுக்கு நேற்று பின்னிரவில் கரையைக் கடந்தது.இதனையொட்டி பெய்த கனமழை காரணமாக சுவர் இடித்து விழுந்தது, மரம் முறிந்து விழுந்தது என நடந்த விபத்துகளில் 7 பேர் உயிரிழந்தனர். புயல் பாதிப்பு காரணமாக காக்ஸ் பஜார் மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளும் தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்தன.மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பலரும் பள்ளிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
4 வடகிழக்கு மாநிலங்களில் ரெட் அலர்ட்: அசாம், மேகாலயா, மிசோரம், திரிபுரா ஆகிய 4 வடகிழக்கு மாநிலங்களில் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சித்ராங் புயலின் தாக்கத்தால், மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ், வடக்கு 24 பர்கானாஸ் மற்றும் கிழக்கு மிட்னாபூர் ஆகிய கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
சித்ராங் புயல் காரணமாக வடகிழக்கு மாநிலங்களில் தீபாவளி பண்டிகை நாளான திங்கள்கிழமை அன்று, லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்துள்ளது. இயல்பு வாழ்க்கை மட்டுமல்ல, தீபாவளி கொண்டாட்டங்களும் மழையால் தடைபட்டது. அடுத்த 48 மணி நேரத்தில் திரிபுராவின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திரிபுராவின் பல்வேறு மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். அசாம் தலைநகர் குவாஹாட்டியிலிருந்து 120 க்கும் மேற்பட்ட தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் திரிபுராவுக்கு அனுப்பப்பட்டனர்.