`வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறும் பெண் பணியாளர்கள்; விடுப்பு 270 நாள்கள்’ – தமிழக அரசு

வாடகைத்தாய் மூலம் குழந்தைபெறும் அரசு பெண் பணியாளர்களுக்கான விடுப்பு 270 நாள்கள் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு பெண் ஊழியர்களுக்கான பேறுகால விடுப்பு, முன்பு 3 மாதங்களாக இருந்தது. 2016-ம் ஆண்டில் இது 9 மாதங்களாக உயர்த்தப்பட்டது. கடந்தாண்டு தமிழ்நாடு பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கான பேறு கால விடுப்பு கால அளவானது 12 மாதங்களாக உயர்த்தி அறிவிக்கப்பட்டது.

தமிழக அரசு

இந்த நிலையில், தமிழக அரசு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஷம்பு கல்லோலிகர் வெளியிட்டுள்ள அரசாணையில், வாடகைத்தாய் மூலம் குழந்தைபெறும் பெண் பணியாளர், ஆசிரியர் உள்ளிட்டோருக்கான விடுப்பு 270 நாள்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அரசாணையில், “ பெண் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் 12 மாத மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது. மாற்று கருவறை தாய் மூலம் குழந்தைகளை பெறும் அரசு பெண் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, பச்சிளம் குழந்தைகளை மிகுந்த கவனமுடன் பராமரிக்க ஏதுவாக, தத்தெடுக்கும் பெற்றோர்களுக்கு வழங்கப்படும் விடுப்பிற்கு நிகராக 270 நாள்கள், குழந்தை பராமரிப்பு விடுப்பு நிபந்தனைகளுக்குட்பட்டு வழங்கப்படுகிறது. சமூகப் பாதுகாப்பு இயக்குநரின் கருத்துருவை நன்கு பரிசீலித்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்று கருவறை தாய் மூலம் குழந்தை பெறுவதற்கான ஒப்பந்தத்தை சட்ட ரீதியாக பதிவு செய்து இருத்தல் வேண்டும். குழந்தை பிரசவித்த மருத்துவரிடம் இருந்து பெறப்பட்ட மருத்துவச் சான்றிதழ் அடிப்படையில் விடுப்பு வழங்கப்பட வேண்டும். இந்த விடுப்பானது, அரசு மற்றும் அரசு சார்ந்த அனைத்து நிறுவனங்களில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கும் பொருந்தும். இது, முதல் 2 குழந்தைகளின் பிரசவத்துக்கு மட்டுமே பொருந்தும் என அரசாணையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.