விலகும் மர்மம்… 5 பேரை சுற்றி வளைத்த போலீஸ்- கோவை வெடிவிபத்து பின்னணி!

தமிழகத்தை மீண்டும் பரபரப்பிற்கு ஆளாக்கிய சம்பவம் கோவை கார் சிலிண்டர் விபத்து. இதை எதிர்பாராமல் நடந்த விபத்தாக மட்டும் கடந்து செல்ல முடியவில்லை. ஏனெனில் மர்ம மூட்டைகள், அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள், நாட்டு வெடிகுண்டுகள் உள்ளிட்டவற்றால் சந்தேகம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா(25), முகமது அசாருதீன்(23), ஜி.எம் நகரை சேர்ந்த முகமது ரியாஸ்(27), ஃபிரோஸ் இஸ்மாயில்(27), முகமது நவாஸ் இஸ்மாயில்(26) ஆகியோர் ஆவர்.

இதையடுத்து விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. குறிப்பாக மர்ம மூட்டைகள், நாட்டு வெடிகுண்டிற்கான மூலப் பொருட்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டு உண்மைகள் வெளிக்கொண்டு வரப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாக கோவை மாநகர பகுதியில் உக்கடம் கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் அருகே நேற்று முன்தினம் அதிகாலை மாருதி 800 காரில் கேஸ் சிலிண்டர் ஒன்று திடீரென வெடித்தது.

அதிகாலை 4.30 மணியளவில் நடந்த சம்பவத்தில் கார் ஓட்டுநர் உயிரிழந்தார். சம்பந்தப்பட்ட கார் முற்றிலும் உருக்குலைந்து போனது. இந்நிலையில் உயிரிழந்த நபர் யார்? என விசாரிக்கப்பட்டது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடர் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்களால் கோவையில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் மீண்டும் இப்படியொரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதனால் ஏடிஜிபி முதல் டிஜிபி வரை சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதன் பின்னணி குறித்து விசாரிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகள் தீவிரமாக ஆராயப்பட்டன. இந்நிலையில் கார் சிலிண்டர் வெடிவிபத்தில் பலியான நபர் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் (29) என்று தெரியவந்தது.

உடனே ஜமேசா முபினின் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். அதில் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் கண்டறியப்பட்டன. அதுமட்டுமின்றி ஜமேசா முபின் வீட்டில் இருந்து மர்ம மூட்டைகளை சிலர் எடுத்து செல்லும் சிசிடிவி காட்சிகளும் கைப்பற்றப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக கோவை மாநகர பி4 உக்கடம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, அடுத்தகட்ட விசாரணையில் தீவிரம் காட்டப்பட்டது.

மர்ம மூட்டை எடுத்து செல்லும் நபர்களின் சிசிடிவி காட்சிகள்

இந்த சூழலில் தான் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை சம்பவத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி வருவதால் ஒருவித பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற பயங்கரவாத செயல்களை ஒடுக்கவும், நடைபெறாமல் தடுக்கவும் தமிழக காவல்துறை உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.