அயர்லாந்து அணியுடன் இன்று மோதல்: 2-வது வெற்றி முனைப்பில் இங்கிலாந்து

மெல்போர்ன்,

20 ஓவர் உலக கோப்பை போட்டியின் சூப்பர்12 சுற்றில் இன்று நடைபெறும் ஆட்டங்களில் இங்கிலாந்து-அயர்லாந்து, நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

சூப்பர்12 சுற்று

8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்12 சுற்றில் இடம் பெற்றுள்ள 12 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப்1-ல் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை, ஆப்கானிஸ்தான், அயர்லாந்து அணிகளும், குரூப்2-ல் இந்தியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், ஜிம்பாப்வே, நெதர்லாந்து அணிகளும் அங்கம் வகிக்கின்றன. இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

இந்த போட்டி தொடரில் சூப்பர்12 சுற்றில் இன்று (புதன்கிழமை) உலகின் மிகப்பெரிய ஸ்டேடியங்களில் ஒன்றான மெல்போர்னில் இரண்டு ஆட்டங்கள் அரங்கேறுகிறது.

இங்கிலாந்து-அயர்லாந்து மோதல்

இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் ஜோஸ் பட்லர் தலைமையிலான முன்னாள் சாம்பியன் இங்கிலாந்து அணி, ஆன்டி பால்பிர்னி தலைமையிலான அயர்லாந்தை எதிர்கொள்கிறது.

வலுவான இங்கிலாந்து அணி தொடக்க ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை தோற்கடித்தது. அந்த ஆட்டத்தில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் கச்சிதமாக பந்து வீசி ஆப்கானிஸ்தானை 112 ரன்னில் ‘ஆல்-அவுட்’ செய்து அசத்தினர். சாம் கர்ரன் 10 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்து கலக்கினார். ஆனால் இங்கிலாந்து அணி எதிர்பார்த்தபடி எளிதாக இலக்கை எட்டிவிடவில்லை. அந்த அணி 11 பந்துகளை மீதம் வைத்து தான் வெற்றியை சுவைத்தது. லிவிங்ஸ்டன் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ‘டாப்-4’ பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர். எனவே அந்த அணியினர் பேட்டிங்கில் பொறுப்புடன் செயல்பட வேண்டியது அவசியமானதாகும்.

அதிர்ச்சி அளிக்குமா?

அயர்லாந்து அணி 20 ஓவர் போட்டியில் எதிரணிக்கு அதிர்ச்சி அளிக்கும் ஆற்றல் கொண்டது. முதல் சுற்றில் வெஸ்ட்இண்டீசுக்கு ஆப்பு வைத்த அந்த அணி சூப்பர்12 சுற்றில் தனது முதலாவது ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையிடம் வீழ்ந்தது. அயர்லாந்து அணியின் பேட்டிங்கில் பால் ஸ்டிர்லிங், கேப்டன் பால்பிர்னி, லார்கான் டக்கர், ஹாரி டெக்டரும், பந்து வீச்சில் காரெத் டெலானி, பேரி மெக்கர்த்தியும் நல்ல நிலையில் உள்ளனர்.

பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான 20 ஓவர் தொடரை வென்ற உத்வேகத்துடன் உலக கோப்பை போட்டிக்கு வந்து இருக்கும் இங்கிலாந்துக்கு எதிராக அயர்லாந்து தாக்குப்பிடிப்பது கடினம் தான். இருப்பினும் 50 ஓவர் போட்டியில் 2 முறை இங்கிலாந்தை வீழ்த்தி இருப்பதால் அயர்லாந்து அணி நம்பிக்கையுடன் போராடும். இவ்விரு அணிகளும் ஒரே ஒருமுறை 20 ஓவர் போட்டியில் மோதி இருக்கின்றன. அந்த ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இங்கிலாந்து: ஜோஸ் பட்லர் (கேப்டன்), அலெக்ஸ் ஹாலெஸ், டேவிட் மலான், பென் ஸ்டோக்ஸ், லிவிங்ஸ்டன், ஹாரி புரூக், மொயீன் அலி, சாம் கர்ரன், கிறிஸ் வோக்ஸ் அல்லது டேவிட் வில்லி, அடில் ரஷித், மார்க் வுட் அல்லது கிறிஸ் ஜோர்டான்.

அயர்லாந்து: பால் ஸ்டிர்லிங், ஆன்டி பால்பிர்னி (கேப்டன்), லார்கான் டக்கர், ஹாரி டெக்டர், கர்டிஸ் கேம்பர், ஜார்ஜ் டாக்ரெல், காரெத் டெலானி, மார்க் அடைர், சிமி சிங், பேரி மெக்கர்த்தி, ஜோஷ் லிட்டில்.

நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான்

இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் மற்றொரு ஆட்டத்தில் நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் சந்திக்கின்றன. இந்த ஆட்டத்தின் போது மழை குறுக்கிட வாய்ப்புள்ளதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி தனது தொடக்க ஆட்டத்தில் 89 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை பந்தாடி வியக்க வைத்தது. இதில் 200 ரன்கள் குவித்த நியூசிலாந்து அணி, ஆஸ்திரேலியாவை 111 ரன்னுக்குள் (17.1 ஓவரில்) அடக்கியது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக விளங்கும் நியூசிலாந்து அணி 2-வது வெற்றிக்கு குறி வைத்து முழுவீச்சில் ஆயத்தமாகியுள்ளது.

ஆப்கானிஸ்தான் அணியை பொறுத்தமட்டில் சுழல் தாக்குதல் தான் முக்கிய ஆயுதமாக இருக்கிறது. ரஷித் கான், கேப்டன் முகமது நபி, முஜீப் ரகுமான் ஆகியோரின் மாயாஜால சுழற்பந்து வீச்சையே அந்த அணி அதிகம் நம்பி இருக்கிறது. தனது முதலாவது ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் பணிந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு நியூசிலாந்தின் சவாலை சமாளிப்பது சிரமம் தான். இவ்விரு அணிகளும் கடந்த ஆண்டு நடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் ஒரே ஒருமுறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. அதில் நியூசிலாந்து அணியே வெற்றி பெற்றது.

இந்த போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

நியூசிலாந்து: பின் ஆலென், டிவான் கான்வே, வில்லியம்சன் (கேப்டன்), கிளென் பிலிப்ஸ், ஜேம்ஸ் நீஷம், டேரில் மிட்செல் அல்லது மார்க் சாப்மேன், மிட்செல் சான்ட்னெர், சோதி, டிரென்ட் பவுல்ட் , டிம் சவுதி அல்லது ஆடம் மில்னே, லோக்கி பெர்குசன்.

ஆப்கானிஸ்தான்: ஹஸ்ரத்துல்லா ஜஜாய், ரமனுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஜட்ரன், உஸ்மான் கானி, நஜிபுல்லா ஜட்ரன், முகமது நபி (கேப்டன்), ரஷித் கான், அஸ்மத்துல்லா ஒமர்ஜாய், முஜீப் ரகுமான், நவீன் உல்-ஹக் அல்லது பரீத் அகமது, பாசல்ஹக் பரூக்கி.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.