இபிஎஸ் முகாமில் இருந்து வந்த பாராட்டு… ஓபிஎஸ் அணியினர் ஆனந்தம்!

எடப்பாடி பழனிசாமிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி அதிமுக சார்பில் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று மனு கொடுத்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

முத்துராமலிங்க தேவர் பிறந்த நாளை முன்னிட்டு, வுருகிற 30 ஆம் தேதி பசும்பொன்னில் அதிமுக சார்பில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் இபிஎஸ் மரியாதை செலுத்த உள்ளார். அதற்காக அவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க கோரி காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம்.

மழைநீர் வடிகாலில் விழுந்து உயிரிழந்த செய்தியாளருக்கு தமிழக அரசு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு கொடுத்தால் போதுமா? இந்த உயிரிழப்புக்கு காரணமான மழைநர் வடிகால் பணிக்கான டெண்டர் எடுத்தவர்கள், மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் மீது காவல் துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜெயக்குமார் கூறினார்.

பாராட்டு:
கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த விவகாரத்தில் தமிழக அரசு மௌனம் காப்பது ஏனென்று தெரியவில்லை. அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் இபிஎஸ் தலைமையில் கட்சி சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. கோயம்புத்தூர் வெடிகுண்டு விவகாரம் குறித்து ஓபிஎஸ் தற்போதுதான் கொஞ்சம் தெளிவாக பேசி வருகிறார்.

‘வெடிகுண்டு தயாரிக்கும் அளவுக்கு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துள்ள திமுக அரசிற்கு கடும் கண்டனங்கள்!’ என்று தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த ஓபிஎஸ், இதுதொடர்பாக விரிவான அறிக்கையையம் நேற்று வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் இவ்விகாரத்தில் இ பிஎஸ் முகாமில் உள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஓபிஎஸ்ஸை பாராட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.