கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதிக்கான எம்.எல்.ஏ அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த ரூ.25,000 மதிப்பிலான நீர் மூழ்கி மோட்டரை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. இது குறித்து போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ கோவி.செழியன் தமிழக அரசின் தலைமை கொறடாவாக பதவி வகித்து வருகிறார். இவருடைய எம்.எல்.ஏ அலுவலகம் கும்பகோணம் மயிலாடுதுறை சாலையில் திருவிடைமருதூர் மெயினில் அமைந்துள்ளது. கோவி.செழியன் தன் சொந்த நிதியில் இறந்தவர்களின் உடலை வைப்பதற்கான குளிசாதனப்பெட்டியை வாங்கி அலுவலகத்திலேயே வைத்து தனது தொகுதியைச் சேர்ந்தவர்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார்.
அதற்காக எம்.எல்.ஏ அலுவலகத்தில் பணியாளர்கள் சிலரையும் நியமித்துள்ளார். அலுவலகத்தின் தண்ணீர் வசதிக்காக பின்புறத்தில் ஆழ்துளை நீர்மூழ்கி மோட்டார் அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ரூ.25,000 மதிப்பிலான அந்த நீர்மூழ்கி மோட்டாரை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். எப்போதும் மக்கள் நடமாட்டம் இருக்கக்கூடிய பகுதியில் திருட்டு நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. அத்துடன் தமிழக அரசின் தலைமை கொறடாவாக இருக்கும் எம்.எல்.ஏ அலுவலகத்திலேயே திருட்டு நடந்துள்ளதை எதிர்க்கட்சியான அ.தி.மு.க-வினர் விமர்சித்து வருகின்றனர்.

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த சிலரிடம் பேசினோம். “தீபாவளி பண்டிகைக்காக கடந்த 23-ம் தேதி இரவு எம்.எல்.ஏ அலுவலகத்தை பூட்டிச் சென்றுள்ளனர். அலுவலக உதவியாளரான அன்பழகன் மீண்டும் வந்து அலுவலகத்தை திறந்துள்ளார். அப்போது பின்புறம் இருந்த நீர்மூழ்கி மோட்டார் திருடப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். அதன் மதிப்பு ரூ. 25,000 எனக் கூறப்படுகிறது.
இது குறித்து அன்பழகன், திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அரசு கொறடாவும் நீர்மூழ்கி மோட்டாரை திருடிச் சென்றவர்களை கண்டுபிடிக்கும்படி போலீஸிடம் வலியுறுத்தியதாகச் சொல்லப்படுகிறது. இதையடுத்து போலீஸார் மோட்டாரை திருடிச் சென்றவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்” என்றனர்.