`காந்தாரா' படப்பாடல் திருடப்பட்டதா? தாய்க்குடம் பிரிட்ஜ் இசைக்குழுவினர் சொல்வது என்ன?

இயக்குநர் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் சப்தமி கவுடா, கிஷோர், அச்யுத் குமார், வினய் பிடப்பா, பிரமோத் ஷெட்டி, உக்ரம் ரவி, பிரகாஷ் துமிநாட் ஆகியோர் நடிப்பில் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வெளியான திரைப்படம் ‘காந்தாரா’. இயக்குநர் ரிஷப் ஷெட்டியே இப்படத்தில் கதாநாயகனாகவும் நடித்திருந்தார். கன்னட மொழியில் வெளியான இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றது. இதையடுத்து தமிழ், தெலுங்கு மொழிகளில் டப் செய்யப்பட்டு அக்டோபர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

நிலத்திற்காக, அரசாங்கத்தாலும் ஆதிக்க சக்திகளாலும் பழங்குடியின மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் நாட்டுப்புறக் கலைகளைச் சார்ந்த பாடல்களும் பதிவுகளும் இருந்தன.

தாய்க்குடம் பிரிட்ஜ் இசைக்குழுவினர்

குறிப்பாக இத்திரைப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி பலரையும் பிரமிக்க வைத்திருந்தது என்று கூறலாம். அதில் இடம்பெற்ற ‘வராஹ ரூபம்’ பாடலும் காட்சிக்கு வலுசேர்க்கும் வகையில் அமைந்து கவனத்தை ஈர்த்திருந்தது. இந்நிலையில் கேரளத்தைச் சேர்ந்த ‘தாய்க்குடம் பிரிட்ஜ் (Thaikkudam Bridge)’ என்கிற இசைக்குழு காந்தாரா திரைப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் இடம்பெற்ற ‘வராஹ ரூபம்’ எனும் பாடல் 2017-ம் ஆண்டு வெளியான தங்களது ‘நவரசம்’ பாடலிலிருந்து எடுக்கப்பட்டது என்று கூறியுள்ளனர். மேலும், ‘இப்பாடல் காப்புரிமைச் சட்டத்தை மீறி இயற்றப்பட்டிருக்கிறது’ என்று திட்டவட்டமாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதை தாய்க்குடம் பிரிட்ஜ் இசைக்குழுவினர் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அதில், “தாய்க்குடம் பிரிட்ஜ் எந்தவிதத்திலும் ‘காந்தாரா’ படக்குழுவுடன் இணைந்து பணியாற்றவில்லை என்பதை எங்களின் ரசிகர்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறோம். எங்களுடைய ‘நவரசம்’ எனும் பாடலும் ‘காந்தாரா’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘வராஹ ரூபம்’ பாடலுக்கும் தவிர்க்க முடியாத நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. இது பாடலின் காப்புரிமைச் சட்டத்தை மீறுகிறது. எங்களைப் பொறுத்தவரைப் பாடல் திருட்டுக்கும் பாடலைத் தழுவி இயற்றப்படுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்று கருதுகிறோம். எங்களது பாடலுக்கும் எங்களுக்கும் எந்த அங்கீகாரமும் வழங்கப்படவில்லை. அதுமட்டுமில்லாமல் படக்குழுவினரால் இப்பாடல் அசல் படைப்பாகப் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இப்பாடல் ‘நவரசம்’ பாடலின் காப்பி என்பதால் ‘காந்தாரா’ படக்குழுவினர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க உள்ளோம். இதற்கு ரசிகர்கள் ஆதரவு தர வேண்டும்” என்று பதிவிட்டுள்ளனர்.

இது குறித்து ‘காந்தாரா’ படக்குழுவினர் சார்பில் இன்னும் பதில் எதுவும் அளிக்கப்படவில்லை.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.