கோவையில் வரும் 31-ம் தேதி தமிழக அரசை கண்டித்து முழு அடைப்பு போராட்டத்துக்கு பாஜக அழைப்பு

கோவை: கோவையில் வரும் 31-ம் தேதி தமிழக அரசை கண்டித்து முழு அடைப்பு போராட்டத்துக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது.

இதுதொடர்பாக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் கோவையில் இன்று (அக்.26) செய்தியாளர்களிடம் கூறியதாவது: பயங்கரவாதம் மீண்டும் கோவையில் தலைதூக்கி உள்ளதை, காரில் சிலிண்டர் வெடித்த சம்பவம் உறுதிப்படுத்துகிறது. இறந்த நபர் தீவிரவாதிகளின் நெருங்கிய நபர். தமிழக அரசு பயங்கரவாதத்தை கண்டும் காணாமல் இருக்கிறது என்பது எதார்த்தமான உண்மை. பயங்கரவாதத்தின் ஆணிவேரை தோண்டி எடுத்து அகற்றும் வரை ஆபத்து சூழ்ந்தே இருக்கும். இதை மனதில் கொண்டு தமிழக முதல்வர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எங்களுக்கு 1.5 டன் வெடிமருந்து இருந்ததாக தகவல் வந்துள்ளது. எனவே, இதில் யாரெல்லாம் தொடர்பில் இருந்தார்கள் என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். என்ஐஏவுடன் இணைந்து தமிழக காவல்துறை செயல்பட வேண்டும். தமிழக அரசின் மெத்தனப்போக்கையும், பயங்கரவாதத்தை மூடி மறைக்க வேண்டும் என்ற எண்ணத்தை கண்டித்தும், கோவையை பயங்கரவாதிகளிடமிருந்து இருக்க காக்க வலியுறுத்தியும் கோவை மாநகர, மாவட்ட பாஜக சார்பில் அக்டோபர் 31-ம் தேதி மாநகர் முழுவதும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடைபெறும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நல்ல உள்ளம் கொண்டவர்களை போராட்டத்தை ஆதரிக்க வேண்டும். அதிமுக, கம்யூனிஸ்டுகள், பாமக, மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள், இஸ்லாமிய மக்கள் இந்த போராட்டத்தை ஆதரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.