சுகாதார ரீதியாக தகுதியற்ற பொலிஸ் அதிகாரிகளின் சேவையை நிறைவுசெய்வது தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.
பொதுமக்கள் பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் அதன் தலைவர் அமைச்சர் கௌரவ டிரான் அலஸ் தலைமையில் அண்மையில் (20) பாராளுமன்றத்தில் கூடிய போதே இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
உரிய சுகாதார ஆரோக்கிய நிலையில் இல்லாத பலர் பொலிஸ் சேவையில் உள்ளதாகவும் அவர்கள் வைத்திய சான்றிதழ்களை காண்பித்து சிரமமான கடமைகளில் ஈடுபடுவதில்லை என வருகைதந்த உறுப்பினர்கள் இங்கு தெரிவித்தனர். எனினும், ஒரு சிலருக்கு அவ்வாறான சுகாதார கோளாறுகள் இல்லை என்றும், இதனால் எப்பொழுதும் கடமைகளை சரியாக மேற்கொள்ளும் அதிகாரிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
அதற்கமைய, சுகாதார ரீதியாக தகுதியற்ற சுமார் 4000 பொலிஸ் அதிகாரிகள் தற்பொழுது பொலிஸ் சேவையில் உள்ளதாக பொலிஸ்மா அதிபர் சுட்டிக்காட்டினார். இதன்போது ஆலோசனை வழங்கிய அமைச்சர் கௌரவ டிரான் அலஸ் குறிப்பிடுகையில், சுகாதார ரீதியாக தகுதியற்ற பொலிஸ் அதிகாரிகளை சேவையிலிருந்து நீக்குவது தொடர்பான பிரேரணையை பொலிஸ் திணைக்களத்தினால் தயாரித்து அமைச்சுக்கு சமர்ப்பிக்குமாறு தெரிவித்தார். அதற்கமைய எதிர்வரும் காலத்தில் அதனை செயற்படுத்த நடவடிக்கை எடுப்பதாக அவர் குறிப்பிட்டார்.
அதேபோன்று, இந்த ஆண்டில் பாரிய அளவிலான பொலிஸ் அதிகாரிகள் ஓய்வு பெறுவதால் 16,000 பொலிஸ் அதிகாரிகளுக்கான வெற்றிடம் ஏற்படுவதாகப் பொலிஸ்மா அதிபர் சுட்டிக்காட்டினார்.
மேலும், பொலிஸ் அதிகாரிகள் போதைப்பொருள் பயன்படுத்துவது தொடர்பில் அறிக்கையிடப்பட்டுள்ள சம்பவங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. அதேபோன்று இணையத்தை பயன்படுத்தி தனிநபர்களின் சுயமரியாதைக்கு பாதிப்பு ஏற்படுத்துவது தொடர்பில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது பற்றியும் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், தேசிய அபாயகர அவுடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை, ஆட்களைப் பதிவுசெய்யும் திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான தேசிய செயலகம் ஆகிய நிறுவனங்கள் தொடர்பான தற்போதையை நிலைமை குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான கௌரவ ஜகத் புஷ்பகுமார, கௌரவ லோஹான் ரத்வத்த, கௌரவ சாந்த பண்டார, கௌரவ மொஹான் பிரியதர்ஷன டி. சில்வா, கௌரவ ஜானக வாக்கும்புற, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ மதுர விதானகே, கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே, கௌரவ சந்திம வீரக்கொடி, கௌரவ சிந்தக்க அமல் மாயாதுன்ன, கௌரவ டீ. வீரசிங்க, கௌரவ அசங்க நவரத்ன, கௌரவ (வைத்திய கலாநிதி) கயாஷான் நவநந்த மற்றும் கௌரவ உபுல் மஹேந்திர ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொண்டனர்.
பணிப்பாளர் சட்டவாக்க சேவைகள்/பணிப்பாளர் தொடர்பாடல் (பதில்)
இலங்கை பாராளுமன்றம்