தமிழகத்தில் மருத்துவ துறையில் 4,308 காலியிடம் 2 மாதத்தில் நிரப்ப முடிவு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

திருச்சி: திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில், பருவ கால பேரிடர் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை, காய்ச்சல் முகாம்கள் மற்றும் பொது சுகாதார பணிகள் குறித்த மாநில அளவிலான ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார். அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் 32 இடங்களில் மருந்து கிடங்குகள் உள்ளது. புதிய 5 மருந்து கிடங்குகள் கட்டுவது குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளோம். சென்ற ஆண்டு 1,250 இடங்களில் வருமுன் காப்போம் திட்ட முகாம்கள் நடந்தது.

இந்தாண்டு 800 இடங்களில் நடத்தப்பட உள்ளது. மருத்துவ துறையில் மொத்தமாக 4,308 காலி பணியிடங்கள் 2 மாத காலத்திற்குள் நிரப்பப்படும். நியூரோ அறுவை சிகிச்சை திருச்சி அரசு மருத்துவமனையில் மேற்கொள்ள அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பின்பு மருத்துவர்களுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டு அவர்கள் விருப்பப்பட்ட இடங்களுக்கு சென்றுள்ளனர்.

தமிழகத்தில் மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு தொடர்பாக 2 மருத்துவ சங்கங்கள் வெவ்வேறு விதமான கோரிக்கையை முன் வைத்தனர். இது தொடர்பாக 18 முறை 2 சங்கங்களையும் அழைத்து பேசி உள்ளோம், விரைவில் ஒருமித்த கருத்து ஏற்பட்டு அதற்கான முடிவு எட்டப்படும். தமிழ்நாட்டில் மருந்து தட்டுப்பாடு என்கிற மாய தோற்றத்தை உருவாக்கினார்கள். அது தவறு. மருந்து தட்டுப்பாடு இல்லை என்கிற நிலைதான் உள்ளது. கொரோனா தடுப்பூசி 6.90 லட்சம் உள்ளது. ஆனால் மக்கள் தடுப்பூசி செலுத்த வரவில்லை. தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.