
தாத்தா, பேரன் உறவைச் சொல்லும் கிடா
இந்த ஆண்டு கோவா திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி உள்ள 3 திரைப்படங்களில் ஒன்று கிடா. இந்த தேர்வுக்கு பிறகுதான் இந்த படத்தின் பக்கம் சினிமாவின் கவனம் திரும்பி இருக்கிறது. ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா ஆகியோர் இந்த படத்தை தயாரித்துள்ளனர். கிருமி, ரெக்க படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்த ரா.வெங்கட் இயக்கியுள்ளார். எம்.ஜெயபிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார், தீசன் இசை அமைத்துள்ளார். பூ ராமு, காளிவெங்கட், மாஸ்டர் தீபன், பாண்டியம்மா, லோகி, கமலி உள்பட பலர் நடித்துள்ளனர்.
“மதுரை அருகே உள்ள கிராமத்தில் வாழும் ஒரு சிறுவனுக்கும், அவனது தாத்தாவிற்கும் உள்ள உறவுப்பிணைப்பை சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. அதோடு வீட்டில் வளரும் ஒரு கிடாய்க்கும் அந்த குடும்பத்துக்கும் உள்ள பிணைப்பையும் சொல்லும் படம். தமிழர்களின் வாழ்வியலை அச்சு அசலாக திரையில் வடிக்கும், ஒரு மாறுபட்ட காவியமாக இப்படம் உருவாகியுள்ளது. புதுமுகங்களின் முயற்சியில் உருவாகியுள்ளது. இந்த கதையின் வழியே ஒரு அழகான, எளிமையான காதலும் இருக்கிறது”என்கிறார் இயக்குனர் வெங்கட்.