திருமலை: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க மூத்த குடிமக்களுக்கான டிக்கெட் இன்று ஆன்லைனில் வெளியாகிறது.
திருப்பதி ஏழுமலையானை வரும் நவம்பர் மாதத்தில் 65 வயது நிரம்பிய மூத்த குடிமகன்கள் மற்றும் மாற்று திறனாளி பக்தர்கள் சிறப்பு தரிசனம் வாயிலாக சுவாமியை தரிசிக்க, இன்று 26-ம் தேதி மதியம் 3 மணிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் தனது இணைய தளம் மூலம் ஆன்லைன் டிக்கெட்டுகளை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது.
12 மணி நேரம் மூடல்
சூரிய கிரகணத்தை முன்னிட்டு நேற்று ஆந்திரா மற்றும் தெலங்கானா உள்ளிட்ட இரு தெலுங்கு மாநிலங்களில் உள்ள அனைத்து முக்கிய கோயில்களும் மூடப்பட்டன. சூரிய கிரகணம் நேற்று மாலை 5.11 மணி முதல் 6.27 மணி வரை நடைபெற்றது. இதனையொட்டி, நேற்று காலை 7.30 மணிக்கு புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை சாத்தப்பட்டது. பின்னர் 12 மணி நேரம் கழித்து இரவு 7.30 மணிக்கு, கிரகணத்திற்கு பின்னர் மீண்டும் கோயில் நடை திறக்கப்பட்டு, ஆகம விதிகளின்படி, கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது. அதன் பின்னரே பக்தர்கள் இரவு 8 மணிக்கு மேல், சுவாமியை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர்.
இதேபோன்று, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பத்மாவதி தாயார் கோயில், கோவிந்தராஜ பெருமாள் கோயில், கல்யாண வெங்கடேஸ்வரர் கோயில், கோதண்டராமர் கோயில்,நாராயணவனம், அப்பலைய்ய குண்டா, கபில தீர்த்தம் என அனைத்து தேவஸ்தான கோயில்களும் நடை அடைக்கப்பட்டு, சாந்தி பூஜைகள் செய்த பின்னரே மீண்டும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால், பஞ்ச பூத திருத்தலங்களில் வாயுத்தலமாக விளங்கும் காளஹஸ்தி சிவன் கோயிலில் மட்டும், கோயில் நடை நேற்று திறந்தே இருந்தது.
ஏனெனில் மூலவர் நவக்கிரக கவசம் அணிந்திருப்பதால், இக்கோயில் மட்டும் கிரகண காலங்களில் நடை சாத்தப்படுவதில்லை. அதற்கு பதில், கிரகண கால அபிஷேகம் மூலவருக்கு நடை பெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
சூரிய கிரகணத்தையொட்டி, ஆந்திராவில் முக்கிய கோயில் களான விஜயவாடா கனக துர்கையம்மன் கோயில், அன்னவரம் சத்யநாராயணா கோயில், சிம்மாசலம் நரசிம்மர் கோயில், அஹோபிலம் நரசிம்மர் கோயில், காணிப்பாக்கம் விநாயகர் கோயில் என அனைத்து முக்கிய கோயில்கள் மற்றும் சிறு கோயில்களில் கூட நடை அடைக்கப்பட்டன. இதேபோன்று, தெலங்கானாவில் உள்ள முக்கிய கோயில்களின் நடையும் சாத்தப்பட்டன.