திருமணத்திற்கு பெற்றோர் மறுப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த நங்கவள்ளி அருகே உள்ள செம்மண் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் கோபி (வயது 26). இவர் அந்தப் பகுதியில் விசைத்தறி தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் இவர் அதே பகுதியை சேர்ந்த 12ம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமியை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
இதனையடுத்து கோபி சிறுமியின் வீட்டிற்கு சென்று திருமணம் செய்ய பெண் கேட்டுள்ளார். ஆனால் பெற்றோர் 18 வயது முடிந்தவுடன் பெண் கொடுக்கிறோம் என தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சிறுமியை கடந்த 3 மாதங்களாக பள்ளிக்கு அனுப்பவில்லை. மேலும் சிறுமியை வேறொருவருக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை சிறுமி மற்றும் கோபி ஆகிய இருவரும் தென்னை மரத்துக்கு வைக்கும் அலுமினியம் பாஸ்பேட் மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த உறவினர்கள் இருவரையும் சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இருவரும் இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.