சென்னை: “திமுக அரசு பொறுப்பேற்று 16 மாதங்கள் ஆன நிலையில், தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. தொடர்ந்து தீவிரவாதத்தால் மக்கள் அச்சத்தில் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் உள்ளார்கள். மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அரசின் கடமை. சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்” என்று தமாக இளைஞரணித் தலைவர் யுவராஜா கூறியுள்ளார் .
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து தீவிரவாதம் தலை தூக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக, கடந்த 4 மாதங்களுக்கு முன்பாகவே ஈரோடு, சேலம், கோவை போன்ற முக்கிய நகரங்களில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் கண்டறியப்பட்டு தேசிய புலனாய்வு போலீசார் அவர்களை கைது செய்தனர். அப்போது இந்தச் சம்பவம் கோவை, ஈரோடு, சேலம் பகுதி மக்களிடையே மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து, தீபாவளிக்கு முந்தைய நாள் கோவை, கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் காரில் காஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில், காரில் இருந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். முதலில் சிலிண்டர் விபத்து என்று கூறிய போலீசார், அன்று மாலை வரை காவல்துறையிலிருந்து மக்களுக்கு எந்த தகவலும் வெளியிடவில்லை.
கோவை பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறி இருக்கிறது. கோவையில் மிகப் பெரிய தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததும் அம்பலமாகியுள்ளது. இதனால், கோவை மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். தீவிரவாதத்திற்கு எதிராக தமிழக அரசு மிகவும் அலட்சிய போக்கை கடைபிடிக்கின்றது. இந்த சம்பவம் நடத்து 4 நாட்களாகியும், மக்களுக்கு தைரியத்தை அளிக்கும் வகையில், முதல்வர் ஸ்டாலின், எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வந்தவர் இன்று பெயரளவில் முதல்வர், டிஜிபி சைலேந்திரபாபு, தலைமைச் செயலாளர் இறையன்பு, காவல் துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டு உள்ளார்.
கோவையில் நடந்தது பயங்கரவாத தாக்குதலால் திட்டமிடப்பட்ட ஒரு குண்டு வெடிப்புச் சம்பவம். இதை சொல்வதற்கு முதல்வர் தயங்குகிறார். பயங்கரவாத கும்பலால் இப்படிப்பட்ட சதி திட்டத்தை பண்டிகை நாளன்று ஆள் நடமாட்டம் உள்ள இடத்தில் குண்டு வெடிக்க வைத்து உயிரைக் கொல்லும் வரை காவல்துறையும் உளவுத்துறையும் தூங்கிக் கொண்டிருக்கிறது. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. உளவுத்துறை என்ற பிரிவு தமிழகத்தில் பெயரளவில் மட்டும் தான் உள்ளது. குறைந்தபட்ச பாதுகாப்பு கூட வழங்க முடியவில்லை. தமிழகத்தில் கோவையில் தேசிய புலனாய்வு முகமை இருப்பது போன்று ஈரோடு சேலம் போன்ற மற்ற நகரங்களிலும் தேசிய புலனாய்வு அமைப்பு செயல்பட வேண்டும்.
திமுக அரசு பொறுப்பேற்று 16 மாதங்கள் ஆன நிலையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. தொடர்ந்து தீவிரவாதத்தால் மக்கள் அச்சத்தில் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் உள்ளார்கள். மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அரசின் கடமை. சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். மேலும் இது போன்ற செயல்கள் நடைபெறாமல் தடுக்க தேசிய புலனாய்வு அமைப்பை வலுப்படுத்திடவும், மக்கள் அச்சமின்றி வாழ்வதை உறுதிப்படுத்த தமிழக அரசும், காவல் துறையும் தீவிர நடவடிக்கை எடுப்பது அவசியம் என தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.