நயன்தாரா அம்மாவான விவகாரம் – விதிமீறல் இல்லை என அறிக்கை தாக்கல்

சென்னை : வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற விவகாரத்தில் நடிகை நயன்தாரா விதிமுறைகளை மீறவில்லை என மருத்துவம், ஊரக சேவை நல பணிகள் கழகத்தின் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு, இந்தாண்டு ஜூன் 9ல் திருமணம் நடந்தது. திருமணமான நான்கு மாதங்களிலேயே, இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளதாக, இம்மாதம் 9ம் தேதி, விக்னேஷ் சிவன் அறிவித்தார். இவர்கள் வாடகை தாய் வாயிலாக, குழந்தைகளை பெற்ற தகவல் வெளியானது.

வாடகை தாய் சட்டப்படி, திருமணமாகி ஐந்து ஆண்டுகள் வரை குழந்தைப்பேறு இல்லாதவர்கள்; தம்பதியரில் ஒருவர் குழந்தைப்பேறுக்கு தகுதியான உடல்நிலை இல்லாத பட்சத்தில், உரிய விதிகளை பின்பற்றி, வாடகை தாய் அமைத்து குழந்தையை பெற்று கொள்ளலாம். ஆனால், நயன்தாரா விவகாரத்தில் நான்கு மாதங்களிலேயே குழந்தை பெற்றது பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக, மருத்துவம் மற்றும் ஊரக சேவை நலப்பணிகள் இயக்க இணை இயக்குனர் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் 2016ல், பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும், கடந்தாண்டு டிசம்பரில் வாடகை தாய் பதிவு செய்து, குழந்தை பெற்றதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் இந்த விஷயத்தில் மருத்துவம், ஊரக சேவை நல பணிகள் கழகத்தின் விசாரணை அறிக்கை இன்று(அக்., 26) மாலை வெளியிடப்பட்டது. அதன் விபரம் வருமாறு….

விசாரணையில் இத்தம்பதியர்கள் (Intending Couple) (நயன்தாரா – விக்னேஷ் சிவன்) மற்றும் வாடகைத்தாய் ஆகியோருடைய வயது, இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவன (ICMR) செயற்கை கருத்தரிப்பு தொழில்நுட்பம் மற்றும் வாடகைத்தாய் முறைக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ICMR வழிகாட்டு நெறிமுறைகளின் பிரிவு 3.10.5-ன்படி வாடகைத்தாய்க்கு உரிய தகுதியான வயதிலும் அவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உயிருடன் உள்ளதும விசாரணையில் தெரிய வந்தது. இத்தம்பதியருக்கு (Intending Couple) பதிவு திருமணம் 11.03.2016ல் நடைபெற்றதாக பதிவு சான்றிதழ் மருத்துவமனை சார்பில் சமர்ப்பிக்கப்பட்டது. அத்திருமண பதிவு சான்றிதழின் உண்மைத்தன்மை பதிவு துறையால் உறுதி செய்யப்பட்டுள்ளது. ICMR வழிகாட்டு நெறிமுறைகளின் பிரிவு 3.16.2-ன்படி மேற்காணும் தம்பதியர் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது குறித்த மருத்துவச்சான்று விசாரணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனையில் தம்பதிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவரை விசாரித்தபோது 2020-ல் அவர்களது குடும்ப மருத்துவரால் வழங்கப்பட்ட பரிந்துரை கடிதத்தின் அடிப்படையில் சிகிச்சை அளித்ததாக குறிப்பிட்டார். அக்குடும்ப மருத்துவரின் முகவரியில் விசாரணை செய்தபோது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அத்தொலைபேசி எண்கள் உபயோகத்தில் இல்லை. மேலும் விசாரணையில் அம்மருத்துவர் வெளிநாடு சென்றுவிட்டதாக தெரிய வருவதால் அக்குடும்ப மருத்துவரிடம் குழு விசாரணை மேற்கொள்ளவில்லை.

சினைமுட்டை சிகிச்சை சம்மந்தமான நோயாளியின் சிகிச்சை பதிவேடுகள் மருத்துவமனையால் முறையாக பராமரிக்கப்படவில்லை.
ஆகஸ்ட் 2020 மாதத்தில் சினைமுட்டை (Oocytes) மற்றும் விந்தனு பெறப்பட்டு கருமுட்டைகள் (Embroyo) உருவாக்கப்பட்டு உறைநிலையில் மருத்துவமனையில் சேமித்து வைக்கப்பட்டு நவம்பர் 2021 மாதத்தில் வாடகைத்தாய் ஒப்பந்தம் போடப்பட்டது. மார்ச் 2022-ல் கருமுட்டைகள் வாடகைத்தாயின் கருப்பையில் செலுத்தப்பட்டு இக்குழந்தைகள் அக்டோபர் மாதம் பிரசவிக்கபட்டுள்ளாதாக தெரிய வருகிறது.

செயற்கை கருத்தரித்தல் தொழில்நுட்ப சட்டத்தின்கீழ் வாடகை தாய் உறவினராக இருத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் இச்சட்டத்திற்கு முந்தைய ICMR வழிகாட்டுதலின்படி உறவினர் அல்லாதோர் வாடகைதாயாக செயல்படவும் அவசிய செலவிற்கு மட்டும் பணம் வழங்கும் வழிமுறையும் இருந்தது. விசாரணையில் வாடகைத்தாய் பேறுகாலத்தின்போது சென்னையில் தனியார் மருத்துவமனையில் பேறுகால பராமரிப்பு சிகிச்சை பெற்று வந்துள்ளார். கருக்கள் வளர்ந்த நிலையில் இரட்டை குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் பிரசவிக்கப்பட்டுள்ளது. அக்குழந்தைகள் 09.10.2022 அன்று தம்பதியர்களிடம் (Intending Couple) வழங்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணையில் தனியார் மருத்துவமனையில் கீழ்கண்ட குறைபாடுகள் இக்குழுவால் கண்டறியப்பட்டது. ICMR வழிகாட்டு முறைகளின்படி, மருத்துவமனையில் தம்பதியருக்கு அளித்த சிகிச்சை குறித்த விபரங்கள் மற்றும் வாடகைத்தாயின் உடல் நிலை குறித்த ஆவணங்கள் முறையாக வைத்திருக்க வேண்டும். ஆனால் இதுகுறித்த ஆவணங்கள் சரியான வகையில் மருத்துவமனையில் பராமரிக்கப்படவில்லை. எனவே, மேற்கூறிய வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றாத தனியார் மருத்துவமனையின் செயற்கை கருத்தரித்தல் மையத்தை ஏன் தற்காலிகமாக மூடக்கூடாது என்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.